மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 13 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கார்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில், பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று (ஆக.13) 15 ஆயிரம் கன அடியாக இருந்து நீர் வரத்து, இன்று (ஆக.14) காலை அதிகரித்து விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து உள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை 9.30 மணியில் இருந்து 13 ஆயிரத்து 500 கன அடியாக நீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர் மட்டம் 98.59 அடியாகவும், நீர் இருப்பு 63.02 டிஎம்சியாக உள்ளது.