ஒரிசா மற்றும் மேற்கு வங்காள கடலோரப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பு:
“ஒரிசா மற்றும் மேற்கு வங்காள கடலோரப் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:
தேவாலா (நீலகிரி) 7 செ.மீ, நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பஜார், பந்தலூர், சேருமுல்லே ஹாரிசன் எஸ்டேட் , பிறையார் எஸ்டேட், நடுவட்டம் தலா 1 செ.மீ., சத்தியபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு ), மேலாளத்தூர் (வேலூர் ) தலா 1 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 16 வரை மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 18 வரை தென் மேற்கு அரபிக்கடல் , மத்திய மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 18 வரை மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் உயர் அலை முன்னறிவிப்பு :
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை ஆகஸ்டு 15 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 3.0 முதல் 3.2 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.