தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கனிமொழி எம்.பி. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம், இக்குழுவின் தலைவரும் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினருமான கனிமொழி தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி சென்னையில் இருந்து காணொளி மூலம் பங்கேற்றார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக தேசிய தகவல் மையத்தில், மாவட்ட ஆட்சியர் (உறுப்பினர் மற்றும் செயலாளர்) சந்தீப் நந்தூரி, கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மகளிர் திட்ட அலுவலர் ரேவதி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பய்கேற்றனர். மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதாஜீவன் (தூத்துக்குடி) அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), சண்முகையா (ஓட்டப்பிடாரம்) ஆகியோரும் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் உள்ள 35 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் கட்டுப்பாட்;டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டம், தூய்மை பாரத இயக்கம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டம், தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டம், குடிநீர் விநியோகம், சமூக பாதுகாப்பு திட்டம், வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள், தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள், அனைவருக்கும் கல்வி இயக்கம், டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கனிமொழி எம்பி ஆய்வு செய்தார்.
அப்போது மத்திய அரசின் அனைத்து திட்ட பணிகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.