தமாகா தலைவர் ஜி.கே.வாசனை பாஜக கூட்டணிக்கு வருமாறு வரவேற்கிறோம் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.
தேவர் தேசிய பேரவை தலைவர் ஏ.சி.திருமாறன். இவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் என்ற பெயரில் புதிய கட்சியை மதுரையில் நேற்று தொடங்கினார். இக்கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய பாஜக தேசிய செயற்குழு உறுப் பினர் இல.கணேசன் செய்தியாளர் களிடம் கூறியது: ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் ஆசிரியர்கள் போராட் டம் நடத்தும் நிலையில் உள்ளனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கொள்கைகளை ஏற்கும் எந்த கட்சியையும் பாஜக வரவேற் கும். மத்திய அரசுக்கு ஆதரவு தருவதாக பாமக உறுதிமொழி அளித்துள்ளது. இதே நிலைப்பாட் டில் மாநிலத்தில் இருக்கிறார்களா என அவர்களுக்கே தெரியவில்லை. முதல்வர் வேட்பாளரையும் அறிவித்துள்ளனர். ஆனாலும் தேர்தல் நேரத்தில் பாஜக கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் சிறிய கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் சேர்ந்தால் வெற்றி பெறலாம். திமுக, அதிமுக அல்லாத கூட்டணியில் பாஜக போட்டியிடும். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எந்த பிரச்சினையிலும் சிக்காதவர். தேசிய பார்வை கொண்டவர். அவர் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என இருகரம் கூப்பி வரவேற்கிறோம் என்றார்.