ஒருவரது வாயைத் திறந்து, தொண்டைப் பகுதியைப் பார்வையிடுவதற்கு விளக்குடன் கூடிய குரல்வளை காட்டி (laryngoscope) எனும் கருவி பயன்படுத்தப்படுகிறது. பின்னர், தொண்டைப் பகுதியில் உள்ள சளி போன்றவற்றை அகற்றுவதற்கு தனியாகவும், ஆக்சிஜன் செலுத்த தனியாகவும் குழாய்கள் உட்செலுத்தப்படுகின்றன.
இந்நிலையில், சிகிச்சை பெறுவோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அவர் இருமும்போது வெளியேறும் திவலை மூலம் மருத்துவருக்கு தொற்று ஏற்படும் அச்சம் உள்ளது.
இதைத் தவிர்ப்பதற்காக, புதிய குரல்வளை காட்டி கருவியை வடிவமைத்துள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவர் எம்.பெரியசாமி, அதை பயன்படுத்துவதற்கான அனுமதியையும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அவர் கூறியதாவது:
புதிய குரல்வளை காட்டி கருவியில் தொண்டைக்குள் செல்லும் பகுதியானது சுமார் 13 செ.மீட்டர் நீளம் உடையது. இதன் நுனிப் பகுதியில் 1 செ.மீட்டர் இடைவெளியில் உள்ள 2 துளைகளும் ஒரு சிறிய குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
தொண்டைப் பகுதியில் சளி போன்ற பொருட்கள் இருந்தால் வாயில் இருந்து குரல்வளை காட்டி கருவியை வெளியே எடுக்காமல் அதிலுள்ள குழாய் வழியே உறிஞ்சியின் மூலம் வெளியேற்றிவிடலாம்.
இந்தப் பணியின்போது, ஆக்சிஜன் உடனே தேவைப்படு வதாக இருந்தால் அவசரத்துக்கு இந்தக் குழாய் வழியாகவும் செலுத்தலாம். இருமல் ஏற்பட் டாலும் திவலைகள் வெளியேறாது என்பதால் கரோனா தொற்று அச்சம் இருக்காது.
குறுகிய நேரத்தில் விரைந்து சிகிச்சைக்கான பணிகளை மேற்கொள்வதற்கு இந்தப் பாதுகாப்பான புதிய கருவி பயனளிக்கும். இதைப் பயன்படுத்தி பயிற்சி மருத்துவர்கள் கற்றுக்கொள்ளவும் வசதியாக இருக்கும் என்றார்.
ஏற்கெனவே, இதுபோன்று பல்வேறு விதமான கருவிகளை இம்மருத்துவர் வடிவமைத்து பாராட்டைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.