பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை நீர்த்தேக்கத்தில் கடந்த ஆக.6-ம் தேதி சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த 10-க் கும் மேற்பட்ட இளைஞர்கள் குளித்தனர். அப்போது, நீர்த்தேக்க வடிகாலில் தவறி விழுந்த 4 பேரில், நீரில் மூழ்கி பயிற்சி மருத்துவர், பாலிடெக்னிக் மாணவர் என 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 இளைஞர்கள் உயிருக்கு போராடினர்.
அப்போது, அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த அத்தியூர் அங்காளம்மன் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி செந்தமிழ்ச்செல்வி, அண்ணா மலை மனைவி ஆனந்தவள்ளி, ஆதனூர் நடுத்தெருவைச் சேர்ந்த சுந்தரபாலன் மனைவி முத்தம்மாள் ஆகியோர் அணிந்திருந்த சேலையை அவிழ்த்து 3 சேலைகளையும் ஒன்றாகக் கட்டி ஒரு முனையை தண்ணீ ரில் வீசி, மறுமுனையை மூவரும் பிடித்துக்கொண்டு தண்ணீ ரில் தத்தளித்த மற்ற 2 இளைஞர் களையும் மீட்டனர்.
கொட்டரை நீர்த்தேக்கத்தில் குளிக்க வந்த சிறுவாச்சூரைச் சேர்ந்த பலரும், மீட்கப்பட்ட 2 இளைஞர்களும் தாங்கள் மீட்கப்பட்ட விதம் குறித்து பலருக் கும் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி, இருவரையும் மீட்ட 3 பெண்களுக்கும் பாராட்டு குவிந்தது.
இந்நிலையில், தண்ணீரில் மூழ்கிய 2 இளைஞர்களை உயிருடன் மீட்ட 3 பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் நாளை (ஆக.15) நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் 3 பெண்களுக்கும் தமிழக முதல்வர், கல்பனா சாவ்லா விருது வழங்க முடிவு செய்திருப்பதாகவும், இவர் களை சென்னைக்கு அழைத்து வருமாறும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் செந்தமிழ்ச் செல்வி, ஆனந்த வள்ளி, முத்தம்மாள் ஆகியோரை வருவாய்த் துறை அலுவலர்கள் சென்னைக்கு நேற்று அழைத்துச் சென்றனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பாராட்டி, வழியனுப்பி வைத்தார்.