தமிழகம்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு புகார்: வருவாய் துறையினருடன் இணைந்து வேளாண் அதிகாரிகள் விசாரணை

செய்திப்பிரிவு

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வறிய நிலையில் வாடும் விவசாயிகள் வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்ற காலங்களில் பயன்பெறும் வகையில் கடந்த 2019 பிப்ரவரியில் பிரதமர் மோடியால் ‘பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்டம்’ தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் எளிய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம், மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகள் தங்களது பட்டா, சிட்டா நகலுடன் ஆதார் எண்ணை காட்டி, அந்தந்த பகுதி வேளாண் அலுவலங்களில் விண்ணப்பித்து, எந்த இடை நபர்களும் இன்றி நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் நடைபெறும் இத்திட்டத்தில் குறைந்த அளவே விவசாயிகள் பயன் பெறுவதால், அதிகளவு விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிகளே தாமாகவே முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனியார் கணினி மையங்களில் இதற்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

கடலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 79 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிகணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடலூர் அருகே உள்ள பிள்ளையார் மேடு கிராமம், புவனகிரி அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் விவசாயிகள் அல்லாதவர்களின் வங்கிக் கணக்கில் இரு தவணையாக ரூ.4 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி, இதுபற்றி விசாரணை நடத்த வருவாய் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பிட்ட 2 கிராமங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் பேருக்கு மேல் போலி நபர்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நெய்வேலியில் உள்ள ஒருகணினி மையம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கணினி மையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் இத்திட்டத்தின் கீழ் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜசேகரிடம் கேட்டபோது, “சமீப காலமாக சிலர் தரகர்போல செயல்பட்டு நிலமற்றவர்களிடம் பணம் பெற்று கொண்டு ‘பிரதமரின் கிசான் சம்மான் போர்ட்டலில்’ விண்ணப்பித்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முறைகேடு செய்திருப்பதாக தெரிகிறது.

புதிய பயனாளிகள் சேர்க்கைப்பதிவுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. வேளாண், வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு போலி பயனாளிகள் கண்டறியப்பட்டு நீக்கப்படுவார்கள். அவர்களுக்கு விவசாய நிதியுதவி வழங்கப்பட்டு இருந்தால் திரும்ப பெறப்படும். இம்மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT