தேசியக் கொடி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகர் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ‘‘காவியை களங்கம் என்று குறிப்பிடும் தமிழக முதல்வர் களங்கமான தேசியக் கொடியைத்தான் ஆகஸ்ட் 15-ம் தேதி ஏற்றப்போகிறாரா? அல்லது, காவியை மட்டும் கட் செய்துவிட்டு வெள்ளையும், பச்சையும் அதாவது கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மட்டும் இருந்தால் போதும், இந்துக்கள் வேண்டாம் என்ற முடிவுக்கு நீங்களும் வந்துவிட்டீர்களா?’’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதிமுக உருப்பட வேண்டும் என்றால் அதிமுக கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் இணைய வழியில் புகார் அளித்தார். தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். சட்ட நிபுணர்களிடமும் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, தேசியக் கொடியை அவமதித்ததாக எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.