சென்னை ரயில் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சரக்கு ரயில் சேவையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஜுலை மாதத்தில், 94 பார்சல் ரயில் பெட்டிகள் மூலமாக 2,157 டன் பொருட்களை ஏற்றிச் சென்றதன் மூலம் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த 2019-20 நிதி ஆண்டின் மொத்த கேட்பு பார்சல் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையான 80 பெட்டிகளை விட கூடுதலான எண்ணிக்கையில் வழங்கி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பார்சல் சரக்கு ரயில் பெட்டியானது 23 டன் எடையை சுமக்கும் ஆற்றல் கொண்டதாகும்.
தற்போது, அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய எல்எச்பி வகை பார்சல் சரக்கு ரயில் பெட்டிகள் 24 டன் எடையை சுமக்கும் ஆற்றல் கொண்டதாகும். கடந்த ஜுலை 2020 வரையிலான காலகட்டத்தில் மட்டும் இதுவரை 133 பார்சல் ரயில் பெட்டிகள் மூலமாக ரூ.1.48 கோடி வருவாயை சென்னை கோட்டம் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் மொத்த வருவாயான ரூ.1.21 கோடியை இந்த நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.