தமிழகம்

கொலை வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்த ராமநாதபுரம் ஆய்வாளருக்கு மத்திய அரசின் பதக்கம்: தென்மண்டலத்தில் விருதைப் பெறும் ஒரே காவல் அதிகாரி; பெண் அதிகாரியும்கூட

கி.தனபாலன்

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே கணவரை மனைவி தனது நண்பருடன் சேர்ந்து எரித்துக் கொன்ற வழக்கில் சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கம் பெற்றுள்ளார்.

குற்ற வழக்குகளில் சிறப்பாகப் புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் விரைவில் தண்டனை பெற்றுத்தந்த காவல்துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கங்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

அதன்படி இந்தாண்டிற்கான பதக்கம் நாடு முழுவதும் தமிழகத்தைச் சேர்ந்த 6 அதிகாரிகள் உள்ளிட்ட 121 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரில் 5 பேர் பெண் அதிகாரிகள்.

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி காவல்நிலைய ஆய்வாளர் ஜி.ஜான்சிராணியும் ஒருவர். தென்மண்டல காவல்துறையில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே காவல்துறை அதிகாரியும் இவர் மட்டுமே.

ஆய்வாளர் ஜான்சிராணி அபிராமம் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றியபோது 2018 பிப்ரவரில் கீழக்கொடுமலூரைச் சேர்ந்த ஆறுமுகம்(28) என்பவர் தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி நாடகம் ஆடினார். இவ்வழக்கில் ஆய்வாளர் ஜான்சிராணி தீவிர விசாரணை செய்து, ஆறுமுகம் அவரது மனைவி போதும்பொண்ணு(25) மற்றும் மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்த வேல்முருகன்(22) என்பவரால் கொலை செய்யப்பட்டதாக கண்டறிந்தார்.

மேலும் இருவரும் சேர்ந்து ஆறுமுகத்தைக் கயிற்றால் கட்டி வைத்து ரத்தக் காயம் ஏற்படுத்தி தீவைத்துக் கொன்றதாக புலனாய்வில் தெரிய வந்தது. இதில் சிறப்பாகப் புலனாய்வு செய்து, ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மிக விரைவில் 2019-ம் ஆண்டே போதும்பொண்ணு, வேல்முருகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தார்.

இந்தத் திறமையான புலனாய்வுக்கே ஆய்வாளர் ஜி.ஜான்சிராணிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதக்கம் அறிவித்துள்ளது.

இன்னும் சில நாட்களில் டெல்லி சென்று இப்பதக்கத்தை ஆய்வாளர் பெற உள்ளார். பதக்கம் பெற்ற ஆய்வாளரை ராமநாதபுரத்தில் நேற்று தென்மண்டல ஐஜி முருகன், ராமநாதபுரம் சரக டிஐஜி என்.எம்.மயில்வாகனன், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் ஆகியோர் பாராட்டினர்.

SCROLL FOR NEXT