மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் மாயமானதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர்உட்பட 3 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் சாலை விதிகளை மீறுதல், விபத்து, மற்றும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செயழ்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் சில வாகனங்கள் போலீஸார் உடந்தையுடன் புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக தொடர் புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணனுக்கு தகவல் கிடைத்தது.
அவர் சமீபத்தில் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு வந்து வாகன வழக்குகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தார். அப்போது 8 இரு சக்கர வாகனங்கள், மற்றும் பிற வாகனங்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீஸாரிடம் எஸ்.பி. விசாரணை மேற்கொண்டார். ஆவணங்களை சரிபார்க்காமலே காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்கள் வெளியே சென்றிருப்பதும் கண்டறியப்பட்டது.
இந்நிலையில் மார்த்தாண்டம் காவல் ஆய்வாளர் ஆதிலிங்கபோஸ், உதவி ஆய்வாளர் சுரேஷ் உட்பட 3 போலீஸாரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. பத்ரிநாராயணன் நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை ஆய்வு செய்து உண்மை நிலையை கண்டறிய தக்கலை டி.எஸ.பி. ராமச்சந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.