தமிழகம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கான கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சட்டப்பணிகள் ஆணை குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் தண்டனை பெற்ற குழந்தைகளின் நல்வாழ்வுக்காக செயல்படும் கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றத் தில் “மாற்றம் இந்தியா” அமைப்பின் இயக்குநர் ஏ.நாராயணன் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் தண்டனை பெற்ற சிறுவர்களின் நல்வாழ்வுக்காக கூர்நோக்கு இல்லங்கள் செயல்படுகின்றன. இவற்றின் செயல்பாட்டைக் கண் காணிக்க குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி தகுதி யானவர்களை மாவட்ட அளவில் நன்னடத்தை அதிகாரிகள் மற்றும் சட்ட அதிகாரிகளாக நியமிக்க வேண் டும். அவர்களின் செயல்பாட்டை ஒருங்கிணைந்து ஆய்வு செய்ய மண்டல நன்னடத்தை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்பன உட்பட கூர்நோக்கு இல்லங்கள் தொடர்பாக 15 பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன. இப்பரிந்துரைகளை அரசு அமல் படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியுள்ளார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

தமிழக அரசு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு, சிறார் நீதிக் குழுமம் ஆகிய மூன்றும் சேர்ந்து மனுதாரர் அளித்துள்ள 15 பரிந்துரைகளை ஆய்வு செய்து ஒருமித்த முடிவுகள் எடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மனுதாரர் அளித்துள்ள பரிந் துரைகளில் எல்லாவற்றையும் ச்ச்உடனடியாக நிறைவேற்ற வேண்டுமா அல்லது சிலவற்றை உடனடியாக நிறைவேற்றினால் போதுமா, அவ்வாறு செய்வதில் ஏதாவது பிரச்சினைகள் உள்ளதா என்பது குறித்தும், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் முறையாக அமல்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சிறார் நீதிக் குழுமம், மனுதாரருடன் ஆலோசித்து கூடுதல் பரிந்துரைகளை அளிக்கலாம் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT