பொன்மலை பணிமனையில் நடைபெற்ற போராட்டம். 
தமிழகம்

தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினரைச் சேர அனுமதிக்கும் அரசாணையை ரத்து செய்க: இளைஞர்கள் அமைப்பு வலியுறுத்தல்

ஜெ.ஞானசேகர்

தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் சேர அனுமதிக்கும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வேலை நிராகரிக்கப்பட்ட இளைஞர் உரிமை மீட்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 90 சதவீதமும், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் முழுமையாகவும் தமிழ்நாட்டினருக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் ரயில்வே, மின்சாரம் உட்பட அரசின் பல்வேறு துறைகளிலும் தமிழர்களைக் காட்டிலும் பிற மாநிலத்தவர்கள் அதிக அளவில் தொடர்ந்து பணி நியமனம் செய்யப்பட்டு வருவதாக தமிழர் நலன் விரும்பும் அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

கடந்த ஆண்டுகூட திருச்சி ரயில்வே கோட்டத்தில் குரூப்-2 பிரிவு பணியிடங்களுக்குத் தமிழர்கள் சொற்ப எண்ணிக்கையிலும், வெளி மாநிலத்தவர் 90 சதவீதத்துக்கும் அதிகமாகவும் தேர்வு செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், ரயில்வே தொழிற்சங்கத்தினர், ரயில்வே அப்ரண்டிஸ் முடித்த தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட ரயில்வே தொழில்நுட்பப் பணியாளர்களின் 518 பணியிடங்களுக்கு, பொன்மலை பணிமனையில் கடந்த சில நாட்களாக தினமும் 50 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களில் 500-க்கும் அதிகமானோர் பிஹார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 20 பேருக்குக் குறைவாகவே தமிழர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் குற்றம்சாட்டி கடந்த சில நாட்களாக பொன்மலை பணிமனை முன் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், தமிழக வேலை நிராகரிக்கப்பட்ட இளைஞர் உரிமை மீட்புக் கூட்டமைப்பு சார்பில் பொன்மலை பணிமனையின் பிரதான நுழைவுவாயில் மற்றும் மேற்கு நுழைவுவாயில் ஆகியவற்றை முற்றுகையிடும் போராட்டம் இன்று (ஆக.13) நடைபெற்றது.

"பொன்மலை பணிமனையில் நடைபெற்று வரும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணியை உடனே நிறுத்த வேண்டும். அப்ரண்டிஸ் முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், திராவிடர் கழகம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மக்கள் பாதுகாப்புச் சங்கம், இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு, இரு குழுக்களாகப் பிரிந்து, பணிமனை நுழைவுவாயில்களை முற்றுகையிடச் சென்றனர்.

ஆனால், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநில காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாரும் பணிமனைக்குள் நுழையமுடியாதவாறு தடுப்புகளை அமைத்திருந்தனர். இதையடுத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் ரயில்வே அப்ரண்டிஸ் முடித்து பல ஆயிரம் பேர் வேலைக்குக் காத்திருக்கும் நிலையில், தொடர்ந்து வட மாநிலத்தவர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். தமிழ்நாட்டு அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர்கள், குறிப்பிட்ட வெளிநாட்டினர் பணி நியமனம் பெறும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசாணை பிறப்பிக்கப்பட்டதே இதற்குக் காரணம்.

எனவே, அந்த அரசாணையை தமிழ்நாடு அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். அந்த அரசாணையால் தங்கள் வேலைவாய்ப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை உணர்ந்து, இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அந்த அரசாணையை ரத்து செய்ய அறவழியில் பாடுபட வேண்டும்" என்றனர்.

SCROLL FOR NEXT