தென்காசி மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் கோவில் அணை இன்று காலை நிரம்பியது:
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இருப்பினும் 2 மாதங்கள் போதிய மழை பெய்யாததால் அணை, குளங்கள் நிரம்பாமல் இருந்தன.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால், அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. குண்டாறு அணை, ராமநதி அணை ஆகியவை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பின.
இதேபோல், 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் இன்று 82.90 அடியாக இருந்தது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 69.96 அடியாக இருந்தது. கடந்த 3 நாட்களாக மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
நீர் வரத்து குறைந்துவிட்டதால் இந்த அணைகள் நிரம்புவதில் தாமதமாகிறது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் கோவில் அணை இன்று நிரம்பியது.
இதனால் இந்த அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 5 அணைகளில் 3 அணைகள் நிரம்பிவிட்ட நிலையில் மற்ற 2 அணைகளும் நிரம்பும் நிலையில் உள்ளன.
அடவிநயினார்கோவில் அணை மூலம் சுமார் 2500 ஏக்கர் நிலம் நேரடி பாசனமும், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிரம் மறைமுக பாசனமும் பெறுகின்றன. நேரடி பாசன நிலங்களில் ஜூலை மாதம் கார் சாகுபடி செய்வது வழக்கம்.
இதற்காக வயல்களை தயார்படுத்தி, நெல் விதைப்புப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால், அப்போது அணையில் போதிய நீர் இல்லாததால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், விதைப்பு செய்த நெல் நாற்றுகள் கருகிவிட்டன. தற்போது அணை நிரம்பியுள்ளதால் பிசான பருவ சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி வடகரையைச் சேர்ந்த ஜாகிர் கூறும்போது, “கார் பருவ சாகுபடிக்கு விதைப்பு செய்த நெல் நாற்றுகள் அனைத்தும் தண்ணீரின்றி கருகிவிட்டன. ஓர் ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கார் சாகுபடி பொய்த்துப் போன நிலையில், தற்போது அணை நிரம்பியுள்ளது. பினாச சாகுபடி இன்னும் 2 மாதம் கழித்து தொடங்கும். கார் பருவத்துக்கும், பிசான பருவத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அணை நிரம்பியுள்ளது.
பிசான சாகுபடியை முன்கூட்டியே தொடங்க விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். சாகுபடி செய்ய விவசாயிகளிடம் பணம் இல்லாததால் நெல் விதைகளை மானியத்தில் வழங்க வேண்டும்” என்றார்.