தமிழகம்

பாஜகவுக்கு எதிர்க்கட்சி ஆசை வந்துவிட்டது: அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டல்

எஸ்.கோமதி விநாயகம்

பாஜகவுக்கு எதிர்க்கட்சி ஆசை வந்துவிட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டலாகத் தெரிவித்தார்.

கயத்தாறில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் தான் போட்டி என வி.பி. துரைசாமி கூறியுள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், "பாஜகவுக்கும் திமுகவுக்கும் போட்டி என்றால் அது ஆட்சிக்கு யார் வருவது என்பதற்கானது அல்ல. தேர்தலில் யார் 2-வது இடத்துக்கு வருவது என்றே திமுகவுக்கும் பாஜகவுக்கும் போட்டி.

2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக எங்களது கூட்டணியில் இருந்தது. அதனால், அப்போது அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். அந்தத் தேர்தலில் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கவில்லை. அந்த வகையில் எங்களோடு இருக்கும் காரணத்தால் பாஜகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கும்.

அதன் காரணமாகத்தான் அதிமுக தலைமையில் நாங்கள் தேர்தலை சந்தித்து எதிர்க்கட்சியாக வருவோம் என்று தான் மறைமுகமாக வி.பி.துரைசாமி சொல்லியுள்ளார். அவர் திமுகவில் இருந்த காரணத்தினால் சரியான கருத்தை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

திமுகவிலிருந்து விரைவில் அனைவரும் வெளிவருவார்கள் என மு.க.அழகிரி நீண்ட காலமாக சொல்லி வருகிறார். ஏனென்றால் அங்கு குடும்ப அரசியல் நடக்கிறது. மைனாரிட்டி ஆட்சி, குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்பதைத் தான் 2011-ம் ஆண்டு தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மையக்கருத்தாகக் கொண்டு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு எங்களது கூட்டணிக்கு 202 இடங்களில் வெற்றி வாய்ப்பு அளித்தனர். திமுக வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உயிருடன் இருந்தபோது விட இன்றைக்கும் திமுகவில் குடும்ப ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது.

அன்றைக்கு கருணாநிதி முதல்வர், மகன் ஸ்டாலின் துணை முதல்வர், பேரன் மத்திய அமைச்சர், கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினர் என வரிசையாகப் பதவிகளை பட்டா போட்டனர்.

இன்று அதையும் தாண்டி உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். அதிலும் அவர்களுக்குள் பதவிப் போட்டி. ஸ்டாலினுக்கு கனிமொழியை கண்டால் பயம். கனிமொழி ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.

எனவேதான் கனிமொழிக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலினை முன்னிலை படுத்துகிறார் ஸ்டாலின். இதை நாங்கள் சொன்னால் அரசியல் தான் இருக்கும். அந்தக் குடும்பத்தில் கருணாநிதியின் மூத்த மகனாக உள்ள மு.க.அழகிரி அந்த கருத்தை சொல்லி இருக்கிறார்.

இதன் காரணமாகத்தான் வி.பி. துரைசாமி அங்கிருந்து வெளியேறியுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர் கு.க.செல்வம் வெளிப்படையாகச் சென்று பாஜகவில் இணைந்துள்ளார். தைரியம் இருந்தால் என்னை நிரந்தரமாக நீக்கிப் பாருங்கள் என சவால்விடும் அளவுக்கு சென்றுள்ளார்.

இப்படியாக கட்சிக்குள் நிலவும் மனக்குமுறல்கள் எங்களை விட அழகிரிக்குத் தான் நன்றாகத் தெரியும். எனவே அவர் சொல்கின்ற கருத்து நிச்சயமாக பிரதிபலிக்கும்" என்றார்.

SCROLL FOR NEXT