புதுச்சேரியில் இன்று புதிதாக 305 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது.
புதுச்சேரியில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று மட்டும் 481 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக வரும் ஆக.31 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. இந்நிலையில், இன்று (ஆக.13) புதிதாக 305 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரியில் 5 பேர், ஏனாமில் ஒருவர் என 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று கூறும்போது, "புதுச்சேரியில் 1,082 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 254 பேர், காரைக்காலில் 42 பேர், ஏனாமில் 9 பேர் என 305 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 2 பேர், ஜிப்மரில் 3 பேர், ஏனாமில் ஒருவர் என 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி தந்தை பெரியார் நகர் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த 65 வயது முதியவர், லாஸ்பேட்டை அன்னை நகரைச் சேர்ந்த 53 வயது ஆண், முதலியார்பேட்டை பட்டமாள் நகரைச் சேர்ந்த 50 வயதுப் பெண் ஆகிய மூன்று பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல், முதலியார்பேட்டை அனிதா நகரை விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 85 வயது முதியவர், பங்கூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த 49 வயதுப் பெண் ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஏனாம் பிராந்தியம் பரம்பேட்டாவைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி கடந்த 8 ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்தபோது தொற்று இருப்பது உறுதியானது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.53 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 6,680 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 1078 பேர், காரைக்காலில் 91 பேர், ஏனாமில் 77 பேர் என 1,246 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,231 பேர், காரைக்காலில் 108 பேர், ஏனாமில் 162 பேர், மாஹேவில் 3 பேர் என மொத்தம் 1,504 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 2,750 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று புதுச்சேரியில் 150 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் 2 பேர் என மொத்தம் 153 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,828 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 50 ஆயிரத்து 942 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 43 ஆயிரத்து 135 பரிசோதனைகளுக்கான முடிவுகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. 576 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன" எனத் தெரிவித்தார்.