தமிழகம்

புதுச்சேரி மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை: வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் தொற்றாளர்களால் கரோனா பரவல் அதிகரிப்பு

செ.ஞானபிரகாஷ்

கரோனா சிகிச்சைக்கான மருத்துவமனைகளில் போதிய படுக்கைவசதி இல்லாததால், வீடுகளில்தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்படுவது புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றாளர்களால் சமூக வெளியில் அதிகளவில் கரோனா பரவுகிறது.

சிறிய மாநிலமான புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மரணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கரோனா பரவலில் தமிழகத்தின் பிற மாவட்டங்களை பார்த்து புதுச்சேரியில் உள்ளோர் அச்சமடைந்த சூழல் மாறி, அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலூர் மாவட்டத்தினர் புதுச்சேரியை பார்த்து அச்சமடையும் சூழலை உருவாக்கியுள்ளனர்.

மருத்துவ வட்டாரங்களில் இதுபற்றி விசாரித்தபோது, "புதுச்சேரியில் தற்போது கரோனா தொற்றுடன் மருத்துவமனைகளில் 2,616 பேர் சிகிச்சை பெறுகின்றனர். வீடுகளில் 1,093 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோர் அதிகரிப்பதற்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததே காரணம். தொடர்ந்து தொற்று அதிகரிப்புக்கும் இது ஓர் காரணம்.

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்போர் வெளியே சர்வ சாதாரணமாக நடமாடும் நிலை இருந்து வருகிறது. இப்படி நடமாடுவதை தெரிவித்தவரை வெட்ட துரத்திய சம்பவம் அண்மையில் நடந்தது. சுகாதாரத்துறையினருக்கும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரை கண்காணிப்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது." என்று கூறுகின்றனர்.

ஜிப்மரில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிலர் கூறுகையில், "ஜிப்மரில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள தெரிவித்தனர். அதை இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் பதிவு செய்து உறுதிப்படுத்தக் கூறுகிறார்கள். அங்கு சென்றாலோ இரண்டு மணி நேரம் தொற்றாளர்களுடன் இருக்க வேண்டியுள்ளது. இதைக்கூட அரசு தரப்பில் கவனிப்பதில்லை. அங்கு பணியாளர் பற்றாக்குறை உள்ளது. அதிக பளுவால் அலட்சியமாக உள்ளனர்" என்று குற்றம்சாட்டினார்.

சுகாதாரத்துறை ஊழியர்கள் தரப்பில்விசாரித்தபோது, "கோவிட் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் இல்லை. நியமிக்கவும் நடவடிக்கையில்லை. தேவையான சாதனங்கள் கூட தருவதில்லை." என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

" சிறிய மாநிலமான புதுச்சேரியில் 16 ஐஏஎஸ், 6 ஐபிஎஸ் அதிகாரிகள் லட்சக்கணக்கில் ஊதியம் வாங்குகின்றனர். ஒவ்வொருவர் கண்காணிப்பில் இரண்டு தொகுதிகளை ஒதுக்கி கண்காணிக்க உத்தரவிட்டு கரோனாவை கட்டுப்படுத்தலாம். அவர்களது பணித்திறனை கண்காணிக்க அமைச்சர்களை நியமிக்கலாம். எம்எல்ஏக்கள் கருத்தை கூட அரசு கேட்பதில்லை. தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளை அரசு கேட்டு பெற்று, ஓரளவேனும் நோய் பரவலை கட்டுப்படுத்தியிருக்கலாம். நோய் பரவலுக்கு திட்டமிட்டு கூடுதல் படுக்கைகளை உருவாக்காததே முக்கியக் காரணம். இதையெல்லாம் செய்யாமல் நாள்தோறும் ஆளுநரும், முதல்வரும் மாறி, மாறி கூட்டம் நடத்துவதாலும், சிறுசிறு மாற்றங்களுடன் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதாலும் எந்தப் பயனும் இல்லை" என்று அனைத்து அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால், அரசோ இதை கண்டு கொள்ளாமல் நாள்தோறும் கரோனா தொடர்பான புள்ளி விவரங்களை அளித்துக் கொண்டே இருக்கிறது.

SCROLL FOR NEXT