கூடலூரில் பெய்த கன மழையால் புளியம்பாறை-கோழிக்கொல்லி கிராமத்துக்கு செல்லும் நடைபாலம் சேதமடைந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள 300 பேர் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கூடலூர் அருகேயுள்ள புளியம்பாறை கோழிக்கொல்லி பழங்குடியினர் கிராமத்துக்கு செல்லும் நடைபாலம் வெள்ளத்தில் சேதமடைந்தது. கோழிக்கொல்லி கிராமத்துக்கு செல்லும் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், யாரும் அவ்வழியே வரக்கூடாது என பாதை மூடப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 300 பேர் கிராமத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ) பந்தலூர் 112, தேவாலா 83, பாடந்தொரை 80, அவலாஞ்சி 75,ஓவேலி 72, அப்பர் பவானி 44, நடுவட்டம் 40.5, கூடலூர் 33, கிளன்மார்கன் 20, உதகை 13.4 மி.மீ. மழை பதிவானது.
கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பயிர் சேதத்துக்கான நிவாரணம் பெற சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் தங்கள் பகுதி உதவி தோட்டக்கலை அலுவலர் அல்லது உதவி தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தை அணுகி சேதம் குறித்து பதிவு செய்துகொள்ளலாம்.
பாக்கு, மரவள்ளி, வாழை, காய்கறி உட்பட்ட பயிர்கள் சேதமாகி இருந்தால், அதற்கான விவரங்களை உதவி தோட்டக் கலை அலுவலர் அலுவலகம் கூடலூர்-04262 261376, உதவி தோட்டக் கலை அலுவலர் கூடலூர்-9943166175, உதவி தோட்டக்கலை அலுவலர் செருமுள்ளி-9688319370, உதவி தோட்டக்கலை அலுவலர் நெலாக்கோட்டை-9486189975, உதவி தோட்டக் கலை அலுவலர் நெல்லியாளம்-9385661439, உதவி தோட்டக் கலை அலுவலர் சேரம்பாடி-6380446402 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.