மணலியில் இருந்து இறுதிகட்டமாக 15 கன்டெய்னர்கள் மூலம் அமோனியம் நைட்ரேட் ஐதராபாத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
அம்மன் கெமிக்கல்ஸ் எனும் கரூர் நிறுவனம் 2015-ல் உக்ரைன் நாட்டில் இருந்து அமோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்தது. அவை, உரிய அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்டதாக சென்னை சுங்கத் துறை பறிமுதல் செய்து, மணலியில் உள்ள சரக்குப் பெட்டக முனையத்தில் 37 கன்டெய்னர்களில் வைத்திருந்தது. இதனால், விபத்து ஏற்படும் என புகார் எழுந்ததையடுத்து, அதை அப்புறப்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சுங்கத் துறைக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, அமோனியம் நைட்ரேட்டை சுங்கத்துறை ஏலம்விட்டபோது, அதை ஐதராபாத்தில் உள்ள சால்வோ கெமிக்கல்ஸ் அண்ட் எக்ஸ்புளோசிவ் என்ற தனியார் நிறுவனம் ஏலம் எடுத்தது. எனவே, மணலியில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் ஏற்கெனவே 2 கடடங்களாக அனுப்பி வைக்கப்பட்டன. மீதமுள்ள 15 கன்டெய்னர்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.