தமிழகம்

மொபைல் ரேஷன் விநியோகம் அமல்படுத்தப்படுமா?- எதிர்பார்ப்பில் சேம்புக்கரை, தூமனூர் மலை கிராம மக்கள்

செய்திப்பிரிவு

தங்கள் சிரமத்தை போக்கும் விதமாக மொபைல் ரேஷன் கடை வருமா என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் ஆனைகட்டி அருகே உள்ள சேம்புக்கரை, தூமனூர் மலை கிராம மக்கள்.

கோவை மாவட்டம் ஆனைகட்டியிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ளது சேம்புக்கரை, தூமனூர் கிராமங்கள். இந்த மலை கிராமங்களுக்குச் செல்லவேண்டுமென்றால், ஆனைகட்டியிலிருந்து கோவை செல்லும் சாலையில் 8 கிமீ சென்று, அங்குள்ள வனத்துறை தடுப்பிலிருந்து பிரியும் வனப் பகுதிக்குள் 5 கிமீ செல்ல வேண்டும். இந்த 5 கிமீ சாலையும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஜீப் மட்டுமே செல்லக்கூடிய கரடுமுரடான காட்டுப் பாதை. பகலிலேயே காட்டு யானைகள் குறுக்கிடும் பகுதி. இந்த கிராமங்களுக்குள் வெளி ஆட்கள் செல்ல வேண்டுமானால் வனத்துறை அனுமதி பெற்றே செல்ல வேண்டும். மலை கிராம மக்களை பொறுத்தவரை, ஆனைகட்டிக்கு வருவதற்கு காட்டுக்குள் குறுக்கு வழியில் 8 முதல் 10 கிமீ தூரம் நடந்தே செல்வர். ஆலமரமேடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு அதிகாலை 4 மணிக்கே எழுந்து நடந்து செல்வர்.

நீண்டகால கோரிக்கைக்குப்பின் 5 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை அனுமதியுடன் இக் கிராமத்துக்கு சாலை போடப்பட்டுள்ளது. அதில் தற்போதும் ஜீப் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஒருவருக்கு ரூ.10 கட்டணம் செலுத்தி சென்று வருகின்றனர். ரேஷன் கடையில் அரிசி விநியோகிக்கும்போது ஜீப்பில் 30 பேர் வரை பயணிக்கின்றனர். 25 முதல் 35 கிலோ அரிசி வாங்கினால் ஒரு கிலோவுக்கு ரூ.1 முதல் ரூ.2 வரை ஜீப்பில் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அரசு திட்டப்படி ஆதிவாசி மக்களுக்கு இலவசமாக அரிசி கிடைத்தாலும், அதை எடுத்துச் செல்ல கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் எங்கள் ஊருக்கு பகுதி நேர ரேஷன் வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் சேம்புக்கரை, தூமனூர் ஆகிய இரண்டு கிராமங்களிலும் சுமார் 300-க்கும் குறைவான குடும்பங்களே வசிப்பதால் அது இயலாது என்று கூறி, மொபைல் ரேஷன் கடை ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த மாதம் அலுவலர்கள் ஆய்வு செய்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இப் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் சம்பத் கூறும்போது, ‘கடந்த மாதம்தான் ரேஷன் கார்டு இல்லாத தூமனூர், சேம்புக்கரையை சேர்ந்த சுமார் 100 பேருக்கு கார்டுகள் பெற்றுத் தந்தோம்.

பனப்பள்ளி மலை கிராமத்தில் சாலை போட்டுள்ளனர், ஆனால், பேருந்து விடவில்லை. இந்த கிராமங்கள் வனப் பகுதியில் இருப்பதாலும், சாலை மிகவும் குறுகலாக இருப்பதாலும் மினி பேருந்துகள் இயக்க கேட்டோம். அதற்கு தற்போது வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். எனவே மொபைல் ரேஷன் கடையாவது ஏற்பாடு செய்யச் சொன்னோம். தாசில்தார் சுந்தராமன் தலைமையில் ஒரு குழுவினர் ஆய்வு செய்து சென்றுள்ளனர். மொபைல் ரேஷன் கடை வந்தால் மக்கள் சிரமம் பெரிதும் குறையும்’ என்றார்.

இதுகுறித்து தாசில்தார் சுந்தரராமனிடம் பேசியபோது, ‘மொபைல் ரேஷன் விநியோகத்துக்கு தூமனூர், சேம்புக்கரை, பனப்பள்ளி ஆகிய கிராமங்களுக்கு மட்டுமல்லாது, இன்னும் சில போக்குவரத்து இல்லாத கிராமங்களுக்கும் இந்த வசதி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

SCROLL FOR NEXT