வங்கிகளில் 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வரும் வகையில், திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிமுறையை நாளைக்குள் வெளியிடுமாறு, மாநில வங்கியாளர்கள் குழுவுக்கு தொழிலாளர் நல துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து வங்கிகளிலும் 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான வங்கி சேவைகள் சேவைகளை வழங்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும், மாநில வங்கியாளர்கள் குழு செயல்பாட்டு வழிமுறையை அறிவித்தது.
இதற்கு வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு மத்திய, மாநில அரசுகளின் விதிகளை மீறும் வகையில் இருப்பதாகக் கூறி, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வரும் 20-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை முன்னிட்டு, வங்கி ஊழியர் சம்மேளனம், மாநிலவங்கியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் வங்கி நிர்வாக அதிகாரிகளுடன் தொழிலாளர் நல துணை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு விதிகளை மீறுவதாக மாநில வங்கியாளர் குழுவின் செயல்பாட்டு வழிமுறை இருக்கிறது.
பொதுபோக்குவரத்து இல்லாதபோது, 100 சதவீத வருகை என்பது சாத்தியமில்லாததால், 50 சதவீத ஊழியர்கள் வருகையுடன் கூடிய திருத்தப்பட்ட செயல்பாட்டு வழிமுறையை 14-ம் தேதிக்குள் (நாளை) வெளியிட தொழிலாளர் நல துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.