தமிழகம்

கேரள நிலச்சரிவில் இறந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு

அ.அருள்தாசன்

கேரளத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனுவிவரம்:

கேரளத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒவ்வொரு உயிருக்கும் தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழந்த, படுகாயமடைந்த, பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வாழ்நாள் முழுவதற்குமான வாழ்வாதார பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஞ்சோலை, மூணாறு, வால்பாறை, நீலகிரி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை, அனைத்து உரிமைகளையும் உத்தரவாதப்படுத்த வேண்டும். தேயிலை தோட்டங்கள் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் உடமையாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்து மக்கள் கட்சி

இந்து கோயில்களுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலைகளை அகற்றவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சியினர் தென்மண்டல தலைவர் டி.கே.பி. ராஜாபாண்டியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனு:

கரோனா தொற்றால் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் செயல்படவில்லை. தேர்வுகள் நடத்த இயலாமல்போனது. 10-ம் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன.

தமிழகத்தில் தனித்தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குறித்த எந்தவித அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. இதனால் தனித்தேர்வு எழுதும் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படுகிறது. அரசும், கல்வித்துறையும் இதை கருத்தில் கொண்டு தனித்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு குறித்த விளக்கத்தை அளித்து, அவர்கள் உயர்கல்வி கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT