தமிழகம்

குட்கா தடையின்றி கிடைப்பதை நிரூபிக்கவே பேரவைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது: அது உரிமை மீறலாகாது: உயர் நீதிமன்றத்தில் திமுக வாதம்

செய்திப்பிரிவு

குட்காவுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் சாதாரணமாக கடைகளில் கிடைப்பதை சுட்டிக்காட்டவே பேரவைக்குள் கொண்டுச் சென்று காட்டப்பட்டது, அதை சொல்ல உரிமை இருக்கிறது, அது உரிமை மீறல் ஆகாது என உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் கடைகளில் தடையற்று விற்பனை செய்யப்படுவதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக குட்கா பாக்கெட்டுகளை திமுக உறுப்பினர்கள் பேரவைக்குள் கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக சட்டபேரவை உரிமை குழு எடுத்த நடவடிக்கையில் அனுப்பபட்ட உரிமை மீறல் குழு நோட்டீஸை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏ-க்கள் 2017 செப்டம்பர் 7-ல் வழக்கு தொடர்ந்தனர்

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் திமுக எம்எல்ஏ-க்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த தடையை நீக்க கோரி சட்டபேரவை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவும் நிலுவையில் உள்ளது.

2017-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்குகள் இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கில், ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ மற்றும் அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது அவர்கள் வாதத்தில், உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர்ந்த திமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டதாகவும், கு.க.செல்வத்துக்கு தாங்கள் ஆஜராகவில்லை எனவும் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பாக ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உரிமை மீறல் குழு தலைவராக இந்த பிரச்சினையை விசாரிக்க கூடாது.

உரிமை மீறல் பிரச்னையில், சட்டமன்ற விதிகள் பின்பற்றப்படவில்லை. பாரபட்சமான முறையில், முன்கூட்டியே தீர்மானித்தும் சபாநாயகர், உரிமை மீறல் பிரச்னை எழுப்பி, உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே சட்டமன்றத்துக்கு திமுக உறுப்பினர்கள் குட்கா பொருட்களை எடுத்துச் சென்றனர். சபாநாயகருக்கு எந்த அவமதிப்பும் செய்யவில்லை, எந்த உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை.

சட்டப்பேரவைக்குள் தகவலை தெரிவிக்க கருத்துரிமை உள்ளது. கருத்து தெரிவித்ததற்காக உரிமை மீறல் பிரச்னையை எழுப்ப முடியாது. உரிமை மீறல் நோட்டீஸ் சட்டவிரோதமானது, இதில் நீதிமன்றம் தலையிட முடியும்.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். என ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியதால் உரிமை மீறல் பிரச்னை எடுக்கப்பட்டது, உரிமை மீறல் என முடிவெடுத்த சபாநாயகர், இந்த விவகாரத்தை உரிமைக் குழுவுக்கு அனுப்பாமல் சட்டப்பேரவைலேயே விவாதித்திருக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் உரிமை மீறல் பிரச்னையை எடுத்து உரிமைக் குழுவுக்கு அனுப்பிய போதே தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படவில்லை” என வாதிடப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT