தென்மாவட்டத்தில் குறிப்பிட்ட ரயில்களின் வேகத்தை 110 கி.மீ. வேகத்தில் அதிகரிக்க சோதனை ஓட்டம் நடக்கிறது என, ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக ரயில்வே துறையில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை குறித்த வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். இதற்கு தண்டவாளங்களின் பராமரிப்பு, சிறிய, பெரிய பாலங்களின் தரம் உள்ளிட்டவை ஆய்வு மேற்கொள்ளப்படும்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் ஒத்திகைக்கு பின்னரே சம்பந்தப்பட்ட வழித் தடங்களில் ரயில்கள் வேகம் அதிகரிக்கப்படும். இதற்கு முதல் கட்டமாக ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பு சார்பில், சோதனை ஓட்டம் நடத்தி அறிக்கை வழங்கிய பிறகே அடுத்தடுத்த கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில் மதுரை கோட்டத்தில் சில ரயில் வழித்தடங்களில் 90லிருந்து 110 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி கரோனா ஊரடங்கால் ரயில் போக்குவரத்து இல்லாத வாய்ப்பைப்படுத்தி ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தரநிர்ணய அமைப்பின் ரயில் சோதனை ஓட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நெல்லை - திருச்செந்தூர் இடையே இன்று (ஆக.,13) சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. நெல்லை- செங்கோட்டை, புனலூர் வழியாககொல்லம் வரை ஆக.,14-ம் தேதியும், திருநெல்வேலியிலிருந்து தென்காசி, விருதுநகர் வழியாக மானாமதுரைவரையிலும், பின்பு மானாமதுரையில் இருந்து மதுரை வழியாக திண்டுக்கல்வரை ஆக., 15ம் தேதியும் இந்த சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
மேற்கண்ட வழித்தடங்களில் தண்டவாள பராமரிப்பு, பாலங்கள் தரம் குறித்த அறிக்கை அளித்தபின், ரயில்வே பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் அந்த வழித்தடங்களில் சோதனை ஓட்டம் நடத்தி வேகம் அதிகரிக்க ஓட்டுநர்களுக்கு அட்டவணை வழங்கப்படும் என, மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனற.