தமிழகம்

சித்த மருத்துவ முறைப்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை இலை ஆம்லெட்: குமரியில் கரோனா நோயாளிகளுக்கு விநியோகம்

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவமனைகளில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறைப்படி தயாரான முருங்கை இலை ஆம்லெட் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, தக்கலை தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளுக்கு அதிமுக சார்பில் வாரந்தோறும் மூலிகை கலவையுடன் தயாரான சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கரோனா நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வழங்குவதற்காக முருங்கை இலை ஆம்லெட் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று தயார் செய்யப்பட்டது.

இதை தயார் செய்வதை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பார்வையிட்டு பின்னர் விநியோகம் செய்தார்.

சித்த மருத்துவ முறைப்படி கரோனா நோயிலிருந்து மீளும் வகையில் நோய் எதிர்ப்பு சக்திக்கான முருங்கை இலை ஆம்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இரும்பு சத்து, புரதம் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த உணவு 3 முட்டை, பால், வெங்காயம், பூண்டு, மஞ்சள்தூள், தேங்காய் துருவல், இஞ்சி, சீரகம் போன்றவை கலந்து தயார் செய்யப்பட்டது.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 550 கரோனா நோயாளிகளுக்கு முதல் கட்டமாக முருங்கை இலை ஆம்லெட் விநியோகம் செய்யப்பட்டது.

இதைப்போல் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த உணவை தயார் செய்து வழங்குவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. கரோனா நோயாளிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர் இடையேயும் முருங்கை இலை ஆமலெட் வரவேற்பை பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT