தமிழகம்

பனைத் தொழில் முடங்கியதால் கந்து வட்டிக்கு பணம் வாங்கி வாழும் பனைத் தொழிலாளர்கள்

கி.தனபாலன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைத் தொழில் முடங்கியதால், கந்து வட்டிக்கும், நகைகளை அடகு வைத்தும் பனைத் தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.

தமிழகத்திலேயே அதிகளவு பனை மரங்கள் நிறைந்த பகுதி ராமநாதபுரம் மாவட்டம். இப்பகுதியில் உள்ள பனை மரங்களில் கிடைக்கக்கூடிய ஓலையை வைத்து பாய் முடைதல்,பெட்டி முடைதல், அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழிலை நம்பி மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பாய்கள், பெட்டிகள் பல்வேறு மாநிலங்களுக்கும் செல்கிறது. குறிப்பாக தமிழகத்தில் பாய்கள் விசேஷ நிகழ்ச்சிகளில் சமையல் வேலைகள், காலாண்டர் பார்சல், பீரோவைச் சுற்றி பார்சல் செய்வது பயன்படுத்தப்படுகிறது.

மேலும் ஓலைப்பெட்டிகளில் கருவாடு கெடாமல் இருக்கும் என்பதால், வெளிநாடுகளுக்கு கருவாடு பெட்டியில் வைத்து அனுப்பப்படுகிறது.

விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறாதததும், கரோனா ஊரடங்காலும் பனை ஓலைப் பொருட்கள் விற்பனை இல்லாமல் போனது. அதனால் கடந்த 4 மாதங்களாக வியாபாரிகள் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டனர்.

ராமநாதபுரம் அருகேயுள்ள இருட்டூரணி கிராமத்தைச் சேர்ந்த பொன்மலர் கூறியதாவது, எங்கள் கிராமத்தில் நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பல தலைமுறையாக பனைத் தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறோம்.

கரோனாவால் பாய் உள்ளிட்ட ஓலைப் பொருட்களை வியாபாரிகள் கொள்முதல் செய்யவில்லை. அதனால் நாங்கள் பாய் முடைவதை நிறுத்திவிட்டோம்.

கந்து வட்டிக்கு வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் வாழ்க்கையை நகர்த்தி வருகிறோம். அரசு எங்களது பனை ஓலைப் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். எங்களுக்கும் கரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றார்.

இக்கிராமத்தைச் சேர்ந்த பொன்மலர் கூறியதாவது, இன்றைய இளம் தலைமுறையினர் பனை ஓலைப் பொருட்கள் தயாரிக்க பழகவில்லை. அதனால் இது அழிந்து வரும் தொழிலாக மாறிவிட்டது.

மேலும் அதிகமாக பனைமரங்களை இப்பகுதியில் செங்கல்சூளைகள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு வெட்டி எடுத்துச் செல்கின்றனர். இதனால் இத்தொழிலாளர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது இதை அரசு தடுக்க வேண்டும் என்றார்.

இருட்டூரணி கிராமத்தைச் சேர்ந்த பனை ஓலைப் பொருட்கள் கொள்முதல் வியாபாரி தண்டபாணி கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை ஓலை பாய் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கி தமிழகம் , கேரளா, கர்நாடகா ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறோம். கடந்த 4 மாதங்களாக பனை ஓலை பாய்களை வாங்குவதற்கு மொத்த வியாபாரிகள் வராததால் ஏற்கனவே உள்ள பொருள்கள் அனைத்தும் இருப்பில் உள்ளது

இதனால் மேலும் பனை ஓலை பாய்களை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் பனை ஓலை பாய் தொழிலை நிறுத்தி விட்டனர்.

இருட்டூரணி, கடுக்காய் வலசை, தாமரைக்குளம், இரட்டையூரணி, உச்சிப்புளி, கீழமான் குண்டு , காரான் , கும்பரம் , ரெகுநாதபுரம் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் பொதுமக்கள் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து வருகின்றனர் இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT