சுதந்திர தின விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் வருகிற 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக அரசின் விதிமுறைகளின்படி தென்காசி இ.சி.ஈஸ்வரன்பிள்ளை பள்ளி மைதானத்தில் வருகிற 15-ம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட உள்ளது.
விழாவுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொள்ளவேண்டும். விழாவில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க அனுமதி கிடையாது.
காவல்துறை மரியாதை தொடரப்ன பயிற்சிகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட தியாகிகளை அவரவர் வீட்டுக்கு சென்று, கவுரவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கரோனா தடுப்பு பணியில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் தயாரிக்கும் பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும். அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், தென்காசி கோட்டாட்சியர் பழனிகுமார், தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.