கடந்த மூன்றரை ஆண்டுகளில் முதல்வராக பழனிச்சாமியும் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தையும் முன்னிறுத்தி பெற்ற வெற்றியால் அந்த ஒற்றுமையையும் இரட்டைத் தலைமையையும் மக்கள் விரும்புகிறார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசுகையில், "தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக 56 சதவீதம் கிடைத்துள்ளது.
கரோனோ பாதிப்பிலிருந்து மதுரை மக்களை மதுரை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகவும் மீட்டெடுத்துள்ளது. மதுரை தற்போது கரோனோவிலிருந்து பாதுகாப்பாக உள்ளது. தேவையான தளர்வுகளைத் தொடர்ந்து தமிழக அரசு வழங்கி வருகிறது.
எம்ஜிஆர் இருக்கும் வரை, தேர்தலில் மக்கள் வேறு யாருக்கும் தீர்ப்பளிக்கவில்லை. அவருக்குப் பின்னால் அதிமுகவை இந்தியாவில் 3-வது மாபெரும் இயக்கமாக மாற்றியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுக அரசு நிற்குமா நிலைக்குமா என்ற நிலையில் எளிமையின் அடையாளமாக திகழும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அரசு வலிமையான அரசு என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். முதல்வருக்கு துணையாக துணை முதல்வரும் மூத்த அமைச்சர்களும் அயராது துணை நிற்கிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடைபெற்ற மினி பொது தேர்தலில் (இடைத்தேர்தல்) முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தையும் முன்னிறுத்தி தேர்தல் களத்தை சந்தித்துப் பெற்ற மாபெரும் வெற்றியை ஒற்றுமையைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.
ஏற்கெனவே கூட்டுறவுத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிப் பயணத்தை மக்கள் விரும்புகிறார்கள்,அதே பயணத்தை ஒற்றுமையோடு தொடர வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக ஆதரிப்போம் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்தைத்தான் ஒன்றரைக்கோடி தொண்டர்களின் கருத்தாக உள்ளது” என்றார்..