தமிழகம்

குடும்ப இறுக்கத்தைப் போக்கினாலே வேலையை சுகமாக்கலாம்: காவலர்களுக்குப் பயிற்சியளிக்கும் மனநல ஆலோசகர் ஜெயபிரகாஷ்

என்.சுவாமிநாதன்

சாத்தான்குளம் சம்பவத்துக்குப்பின் காவல்துறையினர் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கின்றனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அந்தந்த மாவட்டக் காவல்துறையின் சார்பில் காவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் பிரத்யேகப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் காவலர்களுக்கு மனநலப் பயிற்சியளிக்கிறார் மனநல ஆலோசகர் ஜெயபிரகாஷ். காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்கும் தன் அனுபவத்தை அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“சாத்தான்குளம் சம்பவத்துக்குப் பிறகு, காவல் துறையினருக்கு வகுப்பெடுக்க வேண்டும் என்று அதிகமான அழைப்புகள் வருகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளாக பட்டாலியன், ஆயுதப்படை முகாம், காவல் நிலையங்கள் எனக் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளுக்கும் தொடர்ந்து மனநலப் பயிற்சி அளித்து வருகிறேன். என் அனுபவத்தில் இருந்து ஒன்றைச் சொல்லலாம். காவலர்கள் என்றாலே நம் மன ஓட்டத்தில் இயல்பாகவே கொடூரமான சித்திரம் பதிந்து இருக்குமே அது நிஜம் அல்ல. காவல் துறையினர் குழந்தைகளைப் போன்றவர்கள்தான். அவர்களது அடுத்தடுத்த பணி அழுத்தம் அவர்களுக்குள் இறுக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதன் வெளிப்பாடு கோபமாகி விடுகிறது.

கடைநிலைக் காவலர் பணியில் இருக்கும் காவலர்கூட அந்தப் பணிக்கு நிர்ணயிக்கப்படும் தகுதியைவிடக் கூடுதலாகப் படித்திருப்பார். வேலைக்கு மீறிய கல்வியும் அவர்களுக்குள் அழுத்தத்தைக் கொடுக்கிறது. இந்த அழுத்தம்தான் இளவயதிலேயே முடி நரைக்கவும், வழுக்கை விழவும் காரணமாகிறது. வேலை நெருக்கடியில் காவலர்கள் பலர் நேரத்துக்கு சாப்பிடுவதும் கிடையாது. இது உடல் எடையைக் கணிசமாகக் கூட்டிவிடும். ஆனால், பொதுசமூகம் காவலர்களின் தொப்பைக்கான இந்த காரணத்தைப் பேசாது. அவர்களுக்கு அது தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

குற்றவாளிகளோடு பழகிப் பழகியே காவலர்களும் இறுகிப்போய் விடுகிறார்கள். அது அவர்களின் தவறு அல்ல. பணி அவர்களைச் செய்யும் அழுத்தத்தின் வெளிப்பாடு அது. எனக்குத் தெரிந்து பல காவலர்கள் ஸ்டேஷனில் இருக்கும் அதே மனநிலையோடு குடும்பத்திலும் இருக்கின்றனர். தன் சொந்த அப்பாவிடம் மனம்விட்டு பேசமுடியாத, சராசரி அப்பாவைப் போல் அவரை ஒருமுறை கட்டியணைக்க மாட்டோமா என ஏங்கும் பையன்களையும் பார்த்திருக்கிறேன்.

உறவுக்காரத் திருமணத்துக்கு அழைத்துச் செல்வதாக மனைவியைக் கிளம்பி இருக்கச் சொல்லியிருப்பார்கள். அவரும் கிளம்பிக் காத்திருப்பார். காவல்நிலையத்தில் இருந்து போலீஸ்காரர் கிளம்பும் சமயத்தில் ஏரியாவில் ஏதோ ஒரு குற்றம் நடந்துவிடும். பணிநேரம் முடிந்து விட்டது என அந்தச் சூழலில் வீட்டுக்குக் கிளம்பிவிட முடியாது. அவரும் குற்றவாளியைத் தேடிப் போய்விடுவார். இந்த இடத்தில் காவலர்களில் பலரும், என்னால் வர முடியவில்லை, தாமதமாகும் என்பதாக மனைவிக்குத் தகவல்கூடச் சொல்வதில்லை. அதைச் சொல்லிவிட்டால் மனைவி புரிந்துகொள்வார். ஆனால், அதைச் செய்வதில்லை. இதனால் பல குடும்பங்களில் விரிசல் விழுகின்றன.

குடும்பத்தையும் வேலையையும் பிரித்துப் பார்க்கும் நேர்த்தியும்கூட சிலருக்கு பணி நெருக்கடியால் இருப்பதில்லை. அண்மையில் ஒரு காவலர் குடும்பத்தோடு மனநல ஆலோசனைக்கு வந்திருந்தார். அப்போது அவரது மனைவி ஒரு குற்றச்சாட்டைச் சொன்னார். ‘என் கணவர் நாள் முழுவதும் வாட்ஸ் அப்பில் ஆன்லைனில் இருக்கிறார். ஆனால் நான் ஏதாவது அனுப்பினால்கூட பதில் அனுப்பமாட்டார்’ எனச் சொன்னார். அதற்கு அந்த காவலரோ, ‘இப்போது ஒரு பகுதியில் சிறு திருட்டு நடந்தால்கூட வாட்ஸ் அப்பில்தான் தகவல் வருகிறது. துறைரீதியான விவரங்களைக்கூட வாட்ஸ் அப்பில் அனுப்புகிறார்கள். பணிரீதியாக அதை அவ்வப்போது பார்க்க வேண்டியதிருக்கிறது’ எனச் சொன்னார்.

‘எப்போது போன் செய்தாலும் எடுப்பதில்லை’ என்ற மனைவியின் குற்றச்சாட்டுக்கு, ‘வேலையில் இருந்தேன்’ எனச் சொன்னார் அந்த காவலர். என்ன பணிநெருக்கடி இருந்தாலும் ஒருநாளைக்கு 5 முறையேனும், சராசரியாக ஒரு நிமிடம் வீதம் ஒதுக்கி ‘நான் சாப்பிட்டேன், இந்த பணியில் இப்போது இருக்கிறேன்’ என வீட்டாரிடம் பகிர்ந்துகொண்டாலே போலீஸாருக்குப் பாதி இறுக்கம் போய்விடும். குடும்ப இறுக்கத்தைத் தொலைத்துவிட்டாலே பணியையும் சுகமாக்கி விடலாம்.

ஒரு நடத்துநர் புதிதாக வேலைக்குச் சேர்ந்ததும் வாசலில் நின்று கூவிக்கூவி ஆள் ஏற்றுவார். அனுசரணையாகப் பேசுவார். அதே கொஞ்சம் அனுபவமாகி, ஊதாச் சட்டை போட்டுவிட்டால் ஓரிடத்தில் அமர்ந்துகொள்வார். நாம்தான் சென்று டிக்கெட் எடுக்கவேண்டும். ‘சில்லறையாகக் கொண்டுவர மாட்டீங்களா?’ன்னு சப்தம் எழுப்புபவர்களும் உண்டு. அதே போன்றுதான் காவல்துறையில் சேரும்போது யாராவது குற்றவாளிகளை அடித்தால்கூட அய்யோ பாவம்ன்னு இரக்கப்படுவாங்க. அதுவே பத்து, இருபது வருடம் ஆகிவிட்டால் அவங்க மனசும் மாறிடுது.

காவலர்கள்னு பலரும் அன்னியமாகவே பார்க்கிறார்கள். காக்கிச் சட்டைக்குள்ளும் ஒரு மனது இருக்கும்தானே? காவலர் என்றே பார்ப்பதால் அவர்களது வலி, வேதனைகளை யாரிடமும் அவர்களால் பகிர்ந்துகொள்ளவும் முடியவில்லை. குடும்ப உறவுகளின் மீதான நேசம்தான் வெளி உலக நேசமாக விரியும். அதன் மேன்மையைத்தான் இந்த பயிற்சி முகாம்களின் வாயிலாகச் சொல்கிறேன்.”என்றார் ஜெயபிரகாஷ்.

SCROLL FOR NEXT