தமிழகம்

மருத்துவமனையில் எம்எல்ஏக்களுக்கு கரோனா சிகிச்சை; செலவினம் குறித்து பேரவை செயலர் முடிவு: வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட எண்ணூர் கத்திவாக்கத்தில் சுனாமி குடியிருப்பில் உள்ள 800 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், முகக் கவசம், கபசுரக் குடிநீர், நோய் எதிர்ப்பு மாத்திரைகளை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திருவொற்றியூர் மண்டலத்தில் 4,113 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 547 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து விட்டனர். கரோனா படிப்படியாக குறைந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசித்த 1,305 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 29 எம்எல்ஏக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவப்படி அடிப்படையில் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுகாதாரத் துறையின் பரிந்துரை அடிப்படையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான கட்டண விவரங்களை சட்டப்பேரவை செயலரிடம் அளித்துள்ளனர். இதற்கான முடிவுகளை அவர்தான் எடுப்பார்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT