கரோனா ஊரடங்கால் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செட்டிநாட்டு கலைப்பொருட்கள் விற்பனை முடங்கியது.
காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள செட்டிநாடுப் பகுதிகளில் நகரத்தார்கள் பாரம்பரியமிக்க கலைநயமான பிரம்மாண்ட வீடுகளை கட்டியுள்ளனர். இக்கட்டிடங்களைக் கட்டுவதற்கு மர சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பர்மா கதவுகள், இத்தாலி மார்பிள்கள், பெல்ஜியம் கண்ணாடிப் பொருட்கள், சீனா பீங்கான்கள் என உலகில் தலைசிறந்த பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
அரண்மனை போன்ற இந்த வீடுகளைப் பார்வையிட இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து சென்றனர். அவர்கள், நகரத்தார் பயன்படுத்திய கலைப்பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதனால் கலைப்பொருட்களை விற்பனை செய்வதற்கென்றே காரைக்குடியில் 40-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இங்கு சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகள், மரத்தூண்கள், கல்தூண்கள், கிரானைட் தூண்கள், தங்கத்தட்டில் வரையப்பட்ட தஞ்சாவூர் ஓவியங்கள், பீங்கான் ஜாடிகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பொருட்கள் ரூ.10 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி சென்னை, திருச்சி, பெங்களூரு, புதுடெல்லி, கோவா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஸ்டார் ஓட்டல்களுக்கும் வாங்கி சென்றனர்.
தற்போது கரோனா ஊரடங்கால் சுற்றுலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டார் ஓட்டல்களும் செயல்படாமல் உள்ளன. இதனால் செட்டிநாட்டு கலைப்பொருள் விற்பனை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.