தமிழகம்

ஏனாமைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் கரோனா தொற்றாளர்களுக்கு விரைவில் அசைவ உணவு

செய்திப்பிரிவு

ஏனாமைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் கரோனா சிகிச்சை பெறுவோருக்கு விரைவில் அசைவ உணவு வழங்கப்படவுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவின் தொகுதியான ஏனாமில் மட்டும் கரோனா தொற்றாளர்களுக்கு சிக்கன், முட்டை, நிலக்கடலை, வாரந்தோறும் ஒரு நாள் பிரியாணி ஆகியவை தன்னார்வலர்கள் மூலம் தரப்படுகிறது.

இதர 3 பிராந்தியங்களிலும் இதுபோல் உணவு தரப் படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அனைத்து பிராந்தியங்களிலும் சமமான சத்தான உணவு தர எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து கரோனா தொற்றா ளர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு தர முதல்வர் நாராய ணசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை யிலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை தரப்பில் விசாரித்தபோது, “கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தினமும் காலை 7.30 மணிக்கு காபி. 8 மணிக்கு இட்லி, கிச்சடி, ஊத்தப்பம், தோசை ஆகியவற்றில் ஏதாவது ஒரு டிபனுடன் சாம்பார், 2 வகையான சட்னி. 11 மணிக்கு மூலிகை சூப். மதியம் 1 மணிக்கு காரக்குழம்பு, சாம்பார், 2 வகையான காய்கறி பொறியல் மற்றும் அப்பளத்துடன் சாப்பாடு வழங்கப்படுகிறது.

மாலை 4 மணிக்கு காய்கறி சூப் அல்லது காளாண் சூப் மற்றும் வடை அல்லது சுண்டல்.

இரவு 8 மணிக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, ரவா அல்லது கோதுமை உப்புமா இவற்றில் எதாவது ஒரு டிபன் மற்றும் சாம்பார், 2 வகையான சட்னி மற்றும் வாழைப்பழம் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முட்டையுடன் வெஜ் பிரியாணி, குழந்தைகள் முதல் சிறுவர் வரை தினமும் மூன்று முறை சூடாக பால் வழங்கப்படுகிறது. ஒரு நோயாளியின் உணவுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.235 செலவு செய்யப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்திக்காக இனி முட்டையுடன் அசைவஉணவு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நாளொன்றுக்கு தொற்றாளர்களுக்கான செலவு ரூ.300 ஆகும். இதுதொடர்பான உணவுப் பட்டியல் தயாராகி வருகிறது. விரைவில் நடைமுறைக்கு வரும்” என்று குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT