தமிழகம்

சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: பேரவையில் அமைச்சர் உறுதி

செய்திப்பிரிவு

காலியாக உள்ள சத்துணவு ஊழியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் சத்துணவுத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு அமைச்சர் பா.வளர்மதி பதிலளித்துப் பேசினார். அமைச்சர் பேசி முடித்ததும் இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பொன்னுபாண்டி எழுந்து, ‘‘சத்துணவு மையங்களில் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை எப்போது நிரப்பப்படும்’’ என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் வளர்மதி, ‘‘சத்துணவு மைய பணியாளர்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சில வழக்குகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் பணியிடங்களை நிரப்ப நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ஓய்வூதியத்தை உயர்த்த..

‘‘சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ரூ.1000 ஓய்வூதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘‘மத்திய அரசு ஓய்வூதியமாக ரூ.200, ரூ.300 மற்றும் ரூ.500 வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு சார்பில் ரூ.1000 ஓய்வூதியமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இந்த ஓய்வூதிய தொகையையும் உயர்த்துவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT