சேலத்தில் நேற்று மாலை ஆரம்பித்த மழை விடிய விடிய பெய்தது. மழையால் ஏற்காட்டில் நான்கு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்படைந்தது. ஏற்காட்டில் அதிகபட்சமாக 98.6 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தினமும் மாலை, இரவு நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று (ஆக.9) மாலை 6 மணிக்கு கார் மேகம் சூழ, குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து, இடி முழக்கமிட மழை பெய்ய ஆரம்பித்தது. மாலை ஆரம்பித்த மழை விடிய விடிய நிற்காமல் பெய்த வண்ணம் இருந்தது.
இம்மழை காரணமாக, சேலம் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காடு அடிவாரத்தில் உள்ள கருங்காலி, கற்பகம் ஓடைகளில் மழை நீர் பெருக்கெடுத்து, காட்டாறாக ஓடியது. சேலம் ஐந்து ரோடு, அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், நாரயணன்நகர், புதிய பேருந்து நிலையம், சூரமங்கலம், குகை, சினிமாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல, திருமணிமுத்தாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஏற்காட்டில் பெய்த கனமழை காரணமாக பல கிராமங்களில் மரங்கள் விழுந்து சாய்ந்தன. ஏற்காடு கொண்டை ஊசி வளைவு 12, 13, 14 சாலையில் மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, சாலைப் போக்குவரத்து பாதிப்படைந்தது. அதேபோல, ஏற்காடு கொண்டை ஊசி வளைவு எண் 7-ல் மண் சரிவால் கற்கள் உருண்டு சாலைகளில் பரவியிருந்தது. இதனால், இன்று (ஆக.10) அதிகாலை முதல் ஏற்காட்டுக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் சம்பவ இடம் வந்து மண் சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர் செய்த பின்னர், மதியத்துக்கு மேல் கனரக வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. சேலத்தில் இன்று மழை இல்லை என்றாலும் காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டமாகக் காணப்பட்டது.
சேலம் மாவட்டம் முழுவதும் பதிவாகியுள்ள மழையளவு (மில்லி மீட்டர் அளவுகளில்):
காடையாம்பட்டி - 71, தம்மம்பட்டி- 10, ஆணைமடுவு - 15, கரியகோவில் - 16, பெத்தாயக்கன்பாளையம் - 36, ஏற்காடு - 98.6, மேட்டூர் - 1.8, எடப்பாடி - 16, கெங்கவல்லி - 5, வீரகனூர் - 5 சேலம் 27.3, ஆத்தூர் - 21.4, வாழப்பாடி - 20.4 ஓமலூர் - 16 என மாவட்டம் முழுவதும் மழை அளவு பதிவாகியுள்ளது.