மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதனால் கடல் அலைகள் சீற்றமாக காணப்படும். எனவே, மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடலோர கிராமங்களுக்கும் மீன்வளத்துறையினர் இந்த எச்சரிக்கை குறித்து தகவல் தெரிவித்தனர்.
மேலும், மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தினர். அதன்படி தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 260 விசைப்படகுகளும் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
அனைத்து படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. அதேநேரத்தில் நாட்டுப் படகு மீனவர்கள் பெரும்பாலானவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர். ஆனால் அவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்லாமல் அருகாமையில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பினர்.