ஜிப்மர் மருத்துவமனை: கோப்புப்படம் 
தமிழகம்

புதுச்சேரியில் அதிகரிக்கும் கரோனா தாக்கம்; தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படுக்கைகள் கிடைப்பதில் தாமதம்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால், அரசு மருத்துவக் கல்லூரி, ஜிப்மர் மருத்துவமனை நிரம்பி வழிகிறது. அதே நேரத்தில், இரு தனியார் மருத்துவக் கல்லூரிகள் தவிர்த்து இதர அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் படுக்கைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், இருவர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். புதிதாக 245 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 5,624 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,180 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 3,355 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 766 பேர், ஏனாமில் 53 பேர் என 819 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று புதிதாக 245 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், 2 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் புதுவை மாநிலத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது.

புதுவையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நாள்தோறும் சராசரியாக 200 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா நோயாளிகளுக்குத் தற்போது ஜிப்மர், கதிர்காமம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகளைத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதித்தனர்.

இந்த மாத இறுதியில் 2,000 கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் படுக்கைகள் தேவைப்படும் என்று மருத்துவர் குழு கூறியுள்ளது. இதனால் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவாகியுள்ளது.

இதனால் கரோனா நோயாளிகளுக்குப் புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்கு 2 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே படுக்கை அளிக்க முன்வந்தது. எஞ்சிய மருத்துவக் கல்லூரிகள் சாதகமான எந்தப் பதிலும் தரவில்லை.

தற்போது கரோனாவால் வீடுகளிலேயே 819 நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் இந்த நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதனிடையே, அரசு மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் காத்திருப்போர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழலில் அரசு புதிதாக படுக்கைகளை உருவாக்க முடியாமல் திணறும் சூழல் உருவாகியுள்ளது.

SCROLL FOR NEXT