இ-பாஸ் முறையால் பொதுமக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போவதில் பெரும் சிக்கல் உள்ளது. இதில் நடக்கும் முறைகேடு காரணமாக பொதுமக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்கிற புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்த புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மனித உரிமை ஆணையம், விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை சார்பில் விஸ்வரத்தினம் என்பவர், மாநில மனித உரிமை ஆணையத்திற்கு இ-பாஸ் நடைமுறை குறித்துப் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், இ-பாஸ் நடைமுறைகள் மனித உரிமை மீறலாக உள்ளது. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார்.
அவரது புகார் விவரம்:
“கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பொது ஊரடங்கு என்ற நெருக்கடியில் சிக்கி தமிழக பொதுமக்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்து வருகின்றார்கள். நாட்டின் நலன் கருதியும், தனிமனித நலன் கருதியும், நோய்த்தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் இவ்வூரடங்கு விதிகளுக்குக் கட்டுப்பட்டுப் பொறுப்புடன் நடந்து கொண்டாலும் ஏழை எளியவர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் கூலி வேலை செய்து வயிறார உண்ண முடியாமல் பசித் துன்பத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க மருத்துவக் காரணங்களின் அடிப்படையிலும், இறப்பு போன்ற காரியங்களின் அடிப்படையிலும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் காரணங்களின் அடிப்படையிலும் ஒருவர், தான் இருக்கும் மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.
மேற்குறிப்பிட்ட அத்தியாவசியக் காரியங்களுக்குச் செல்வதற்கு இணைய வழியில்தான் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு மக்களின் துயரங்களை உணர்ந்து இ-பாஸ் வழங்குவதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இ-பாஸ் வழங்கும் முறை இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மேற்குறிப்பிட்ட மிக முக்கியமான நிகழ்வுகளுக்குச் செல்வதற்கு பல்வேறு நபர்கள் இ-பாஸுக்கு விண்ணப்பித்துக் காத்திருந்து, அனுமதி கிடைக்காமல் ஏமாந்து போகிறார்கள். இதனால் மிகுந்த மனக் குமுறல்களுக்கு ஆளாகிறார்கள்.
தமிழகத்தில் இ-பாஸ் வழங்குவதில் முறைகேடு நடந்து காவல்துறையில் அது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் இத்திட்டத்தினால் கடந்த நான்கு மாதங்களாக பலர் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமலும் அப்படியே சொந்த ஊருக்கு வந்து இருந்தாலும் தொழில் செய்யும் இடத்திற்கு மீண்டும் செல்ல முடியாமலும் தவித்து வருகின்றார்கள்.
இன்னும் சிலர் பிற மாவட்டங்கள்தோறும் தங்கள் வயதான பெற்றோர்களுக்கு அருகில் சென்று உரிய முறையில் உணவு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான காரியங்களைச் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். ஒவ்வொரு மனிதனின் எதிர்காலத்திற்கு மிக அவசியமான கல்வி அறிவைப் பெறும் பொருட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களை நேரில் சென்று ஆய்வு செய்து தேர்ந்தெடுப்பதை இது தடுக்கிறது.
இதனால் மாணவர்களாகிய நுகர்வோர்களின் தேர்வு செய்யும் உரிமையும் இங்கே கேள்விக்குறியாகி நிற்கிறது. நமது சுதந்திர இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் உரிமை பெற்றுள்ளார்கள். ஆனால் தமிழக அரசின் இ-பாஸ் திட்டம் மறைமுகமாக தனிமனித உரிமையைத் தடுக்கிறது.
தமிழக அரசின் இச்செயலை மனித உரிமை மீறலாகவே நான் கருதுகின்றேன். தங்களின் மேலான நடவடிக்கையால் ஒவ்வொரு குடிமகனும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சுதந்திரமாக நகரும் உரிமையை மீட்டுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு விஸ்வரத்தினம் புகார் தெரிவித்துள்ளார்.
புகாரை ஏற்ற மாநில மனித உரிமை ஆணையம், இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நான்கு வார காலத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்கும்படி மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை ஜெயச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.