எம்எல்ஏ ராமர். 
தமிழகம்

குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்குக் கரோனா தொற்று உறுதி

க.ராதாகிருஷ்ணன்

கரூர் மாவட்டம் குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை திமுக எம்எல்ஏ இ.ராமர் (69). இவர் கடந்த 7-ம் தேதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். நேற்று (ஆக.9) வெளியான பரிசோதனை முடிவில் அவருக்குக் கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, பரிசோதனை செய்துகொண்ட தனியார் மருத்துவமனையில் ராமர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து எம்எல்ஏ ராமரிடம் பேசியபோது, "என் மனைவிக்குக் கடந்த வாரம் கரோனா தொற்று உறுதியானதை அடுத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 7-ம் தேதி கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். நேற்று வெளியான பரிசோதனை முடிவில் கரோனா தொற்று உறுதியானதால், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்" என்றார்.

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் காவலர், வெங்கமேடு காவல் ஆய்வாளர், இரு தலைமைக் காவலர்கள், ஒரு பெண் காவலர் மற்றும் ஊர்க்காவல் படை வீரர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளர் குடியிருப்பைச் சேர்ந்த பெண், தலா 4 முதியவர்கள், 4 மூதாட்டிகள், 3 சிறுவர்கள் என மாவட்டத்தில் இன்று (ஆக.10) ஒரே நாளில் 38 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT