சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 56.
சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர், சார் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஐவர் முதலில் கைது செய்யப்பட்டனர். 2-வது சுற்றாக மேலும் 5 பேர் கைதாகினர். அதில் சிறப்பு எஸ்.ஐ. பால்துரையும் அடக்கம்.
சிறப்பு எஸ்.ஐ. பால்துரைக்கு உடல்நலக் குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஜூலை 24-ம் தேதி இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவந்தது. ஏற்கெனவே நீரிழவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.
பால்துரை மரணத்தை, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா உறுதி செய்தார்.
மனைவி புகார்:
2 நாட்களுக்கு முன்னதாக சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரையின் மனைவி மங்கையர் திலகம் மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், எந்தத் தவறும் செய்யாத தனது கணவர் பழிவாங்கப்படுவதாகக் கூறியிருந்தார். நீரிழவு நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த எனது கணவருக்கு கரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது என்று புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு பின்னணி:
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கின் போது கூடுதல் நேரம் செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக கூறி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல் நிலை காவர் முத்துராஜா ஆகியோரை முதலில் கைது செய்தனர்.
பின்னர் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமை காவலர் சாமிதுரை, முதல் நிலை காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ ஏடிஎஸ்பி வி.கே.சுக்லா தலைமையில் அதிகாரிகள் வழக்கை விசாரித்து வந்தனர். விசாரணையில் ஈடுபட்ட சிபிஐ அதிகாரிகள் சிலருக்கு கரோனா உறுதியானதால் தற்சமயம் தற்காலிகமாக விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.