தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள், ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் இன்றுமுதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மாநகராட்சிகளில் சிறு வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படஉள்ளன.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 7-ம் கட்டமாக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சில வழிகாட்டு நெறிமுறைகளுடன் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. உடற்பயிற்சி கூடங்கள் நடத்துவோரும் ஓட்டுநர் பயிற்சி நிலைய உரிமையாளர்களும் தங்கள் மையங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுஆகஸ்ட் 10 (இன்று) முதல் உடற்பயிற்சிக் கூடங்கள், ஓட்டுநர் பயிற்சி நிலையங்கள் செயல்படலாம் எனஅனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உடற்பயிற்சிகூடங்களுக்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன.
அதன்படி, 50 வயதுக்கு மேற்பட்டோர், 15 வயதுக்கு குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், இணை நோய்கள் உள்ளோரை அனுமதிக்க வேண்டாம். உடற்பயிற்சி மேற்கொள்வோர் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்தவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
உடற்பயிற்சியின்போது மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக கருதினால், முகக்கவசத்துக்கு பதில் ‘வைசர்’ பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது உள்ளிட்டஅறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றி உடற்பயிற்சி கூடங்கள் இன்றுமுதல் செயல்பட உள்ளன.
அதேபோல, ஓட்டுநர் பயிற்சிநிலையங்களும் இன்றுமுதல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.
கோயில்கள் திறப்பு
ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஆண்டு வருவாய் ரூ.10 ஆயிரம் வரை உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளிலும் ரூ.10 ஆயிரம் வரை ஆண்டு வருவாய் உள்ள கோயில்கள், தர்காக்கள், மசூதிகள், தேவாலயங்களில் இன்றுமுதல் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயில்களை திறப்பதற்கு சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும், இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களிடமும் அனுமதி பெற வேண்டும்.
அதேநேரம், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்சொன்ன எந்த செயல்பாட்டுக்கும் அனுமதி இல்லை.