கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்த சண்முகையா வீட்டு முன் பரிதவிப்புடன் திரண்டிருந்த உறவினர்கள். 
தமிழகம்

இடுக்கி மண்சரிவில் 22 குடும்பத்தினர் புதையுண்டனர்; ஒரே குடும்பத்தில் 14 பேர் உயிரிழப்பு: கயத்தாறு அருகே மீளாத்துயரில் கிராமமே தவிப்பு

செய்திப்பிரிவு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜமலை பெட்டிமூடி தேயிலைத் தோட்டத்தில் கடந்த 6-ம் தேதி இரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதிநகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 14 பேர் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் தவிக்கிறது.

14 பேரை இழந்துவிட்டோம்

நிலச்சரிவில் உயிரிழந்த சண்முகையா (58) என்பவரது மகன் விஜய் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, “மண் சரிவில் சிக்கி எனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் இறந்து விட்டனர். எனது தந்தை, தாயார் சரஸ்வதி(50), மூத்த சகோதரி சீதாலட்சுமி(39), 2-வது சகோதரி ஷோபனா(32), அவரது கணவர் ராஜா(35) ஆகிய5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சீதாலட்சுமியின் கணவர் கண்ணன்(42), அவர்களது குழந்தைகள் நதியா, விஜயலட்சுமி, விஷ்ணு, 2-வது சகோதரி ஷோபனாவின் மகள் லக்சனா, 3-வது சகோதரி கஸ்தூரி(25), அவரது கணவர் பிரதீஷ்(28), அவர்களது குழந்தைகள் பிரியதர்ஷினி, தர்ஷினி ஆகியோரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை” என்றார் சோகத்துடன்.

35 நிமிடத்தில் எல்லாம் முடிந்தது

இடுக்கி மாவட்டம் ராஜமலை பெட்டிமூடி தேயிலைத் தோட்டகண்காணிப்பாளர் மேகநாதனைதொலைபேசியில் தொடர்புகொண்ட போது, “எனக்கு சொந்தஊர் கயத்தாறு பாரதி நகர். பெட்டிமூடி தேயிலைத் தோட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்கிறேன். தேயிலைத் தோட்டப் பகுதியில் முதல் வரிசையில் 4 வீடுகள், அதற்கு அடுத்தடுத்த வரிசையில் தலா 10 வீடுகள், அதன் பிறகு 6 வீடுகள் என, 30 வீடுகள் இருந்தன. தொழிலாளர்களுக்கான உணவகம், பொழுதுபோக்கு மையம் ஆகியவையும் இருந்தன.

கடந்த 6-ம் தேதி இரவு 10.50 மணிக்கு மேல் திடீரென வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் ஆட்டம் கண்டன. இதனால் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்த போது, வெளிச்சம் இல்லாததால் ஒன்றும் தெரியவில்லை. சிறிது நேரத்தில் 30 வீடுகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக ஒரு தொழிலாளி என்னிடம் கூறினார்.

உடனடியாக நாங்கள் அங்கு சென்ற போது, ‘‘காப்பாத்துங்க... காப்பாத்துங்க... என்ற கூக்குரல் மட்டும் கேட்டது. இரவு 10.45 மணியில் இருந்து 11.20 மணிக்குள் 35 நிமிடங்களில் அனைத்தும் முடிந்துவிட்டது. வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த பலர் நொடிப்பொழுதில் மண்ணில் புதைந்துவிட்டனர்.

3 தலைமுறையில் இதுபோன்ற ராட்சத மழையை நாங்கள் பார்த்ததில்லை. எனது வீடு சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து இடப்புறமாக 20 மீட்டர் தொலைவில் இருந்ததால் குடும்பத்துடன் உயிர் தப்பினோம். சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில், 22 குடும்பத்தினர் மண்ணில் புதைந்து விட்டனர்” என்றார்.

சங்கரன்கோவிலை சேர்ந்தவர்கள்

இடுக்கி ராஜமலை பெட்டிமூடி தேயிலைத் தோட்ட நிலச்சரிவில் சிக்கிய தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள ரத்தினபுரி என்ற நவாச்சாலை கிராமத்தைச் சேர்ந்த காந்திராஜன் (48) உடல் மீட்கப்பட்டது. இவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 6 பேரை காணவில்லை.

இதேபோல், சங்கரன்கோவில் அருகே உள்ள புது கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் நிலச்சரிவில் சிக்கியது தெரியவந்துள்ளது. இதில், அண்ணாதுரை (47) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பவுன்தாய், ராசையா, தங்கம் என்ற பாக்யமேரி, ஜோஸ்வா, மகாலெட்சுமி, அருள் மகேஷ் ஆகிய 6 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மல்லி கிராமத்தினர்

நிலச்சரிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ராசையா, சரோஜா (எ) மகாலட்சுமி, ஜோஸ்வா, அருண்மகேஸ்வரன், அண்ணாதுரை, மரியபுஷ்பம் ஆகிய 6 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் 4 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டன. அண்ணாதுரை, மரியபுஷ்பம் ஆகியோர் உடல்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT