கரோனா சிகிச்சைக்கு ரூ.7.40 லட்சம் கட்டணம் வசூலித்ததாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அனுமதியை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்தது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்து வருகின்றன. இச்சிகிச்சை பெறும்பொதுமக்கள் அதிக நிதிச் சுமைக்குஆளாகாத வகையில் கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், அருப்புக்கோட்டையில் உள்ள சிட்டி மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது நோயாளி ஒருவருக்கு கரோனா சிகிச்சைக்கு ரூ.7.40 லட்சம் வசூலிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அரசு வழங்கிய நெறிமுறைகளின்படி கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை.
கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்து ஆட்சியர் இரா.கண்ணன் உத்தரவிட்டார்.