கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதை கண்டித்து தமிழகத்தில் வீடுகளில் வேல் பூஜையுடன் கந்த சஷ்டி பாராயணமும் செய்யப்பட்டது.
ஒரு யூடியூப் சேனல் சமீபத்தில் தமிழ்க் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் அவதூறாக பேசியதால் ஆன்மிக அன்பர்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.
முருக பக்தர்கள் வேண்டுகோள்
இதைக் கண்டித்து தமிழகத்தில்உள்ள முருக பக்தர்கள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, நேற்று மாலை சரியாக 6 மணிக்கு,பக்தர்கள் அனைவரும் வீடுகள்தோறும் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று தமிழகத்தில் ஏராளமானோர் தங்களது வீடுகளில் வேல் மற்றும் முருகர் படத்துக்கு பூஜை செய்து, கந்த சஷ்டி பாராயணமும் செய்தனர். இதேபோல் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் சஞ்சய் குமார், லட்சுமி என்ற மருத்துவ தம்பதியின் மகன் 3 வயது சிறுவன் சித்தாந்த், முருகர் படத்தை வைத்து பூஜையும், மழலை மொழியில் கந்த சஷ்டி பாராயணத்தையும் பாடினார்.