மதுரை வழக்கறிஞர்கள் 14 பேரை பணி இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹெல்மெட் உத்தரவை எதிர்த்து மதுரையில் போராட்டம் நடத்தியபோது நீதிபதிகளைப் பற்றி அவதூறாகப் பேசியது, இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையின்போது வழக்கறிஞர்கள் நடந்துகொண்ட விதம், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறைக்குள் வழக்கறிஞர்கள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது உள்ளிட்ட பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு மதுரை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.தர்மராஜ், செயலாளர் ஏ.கே.ராமசாமி உள்பட 14 பேரை பணி இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். அப்போது தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க உப விதிகளின்படி 21 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுத்து அதன்பிறகு பொதுக் குழுவைக் கூட்டி போராட்டம் குறித்து அறிவிக்க வேண்டும். ஆனால், ஒருநாளுக்கு முன்னதாக கூடி இப்போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அதனால், சட்டவிரோதமான இப்போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கறிஞர்கள் பிரச்சினை தொடர்பாக திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர்கள் 5 பேர் பங்கேற்றுள்ளனர். தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய பார் கவுன்சில் உறுப்பினர்கள் மேற்கண்ட கூட்டத்தில் கலந்து கொண்டதால், தமிழ்நாடு பார் கவுன்சிலை கலைக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதையடுத்து அதுகுறித்து கவனிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டால், உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊர்வலம் செல்வது, ஆர்ப்பாட்டம் நடத்துவது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடுவது வழக்கம். ஆனால், நேற்று நடந்த போராட்டத்தில் அவையெல்லாம் நடைபெறவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான வழக்கறிஞர்கள் (சுமார் 70 சதவீதம்) நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். உயர் நீதிமன்றமும் வழக்கம்போல செயல்பட்டது.
இப்போராட்டம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் நிருபர்களிடம் கூறும்போது, “மதுரை வழக்கறிஞர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, விளக்கம் பெற்ற பிறகு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து நேரடியாக பணி இடைநீக்கம் செய்து அவர்கள் தொழில் செய்ய முடியாதபடி செய்துவிட்டனர். அதனால்தான் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது நீதிபதி களுக்கு எதிரான போராட்டம் இல்லை” என்றார்.