கரோனா அதிகரிப்பால் புதுச்சேரி பிராந்தியங்களில் ஒன்றான ஏனாமில் மட்டும் மூன்று நாட்கள் முழு ஊரடங்கு இன்று தொடங்கியது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 பிராந்தியங்கள் உள்ளன. தமிழகம் அருகே புதுச்சேரி, காரைக்காலும், கேரளத்தையொட்டி மாஹேயும் உள்ளன. ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றையொட்டி அமைந்துள்ளது புதுச்சேரி ஏனாம் பிராந்தியம். ஆந்திரத்திலிருந்து கரோனா தொற்று ஏனாம் பிராந்தியத்தில் கடும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவின் தொகுதியான ஏனாமில், இதுவரை கரோனா தொற்றால் 283 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் இறந்துள்ளனர். 127 பேர் வரை சிகிச்சையில் உள்ளனர்.
சிறிய பகுதியான ஏனாமில் கரோனா தொற்று அதிகரிப்பால் அங்கு மட்டும் மூன்று நாட்கள் முழு ஊரடங்கு இன்று (ஆக.9) தொடங்கியது.
ஏனாம் நிர்வாகி ஷிவராஜ் மீனா உத்தரவின் பேரில், நடைமுறைக்கு வந்துள்ள முழு ஊரடங்கால் நகரில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. நகரில் தேவையில்லாமல் நடமாடினால் அவர்கள் பிடிக்கப்படுகிறார்கள். அத்துடன் பால் விற்பனை நிலையங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை காலை 6 முதல் 8 வரையில் நடைபெற்றது.
மாலை 6 முதல் இரவு 8 வரையிலும் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மருந்து கடைகள் 24 மணி நேரமும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும் (ஆக.10), நாளை மறுநாளும் (ஆக.11) அரசு அலுவலகங்கள், வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஏனாம் பிராந்தியம் தவிர்த்து இதர 3 பிராந்தியங்களில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.