சிவில் தேர்வில் வெற்றி பெற்ற நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி மல்லிகாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்.
2019-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி மல்லிகா அகில இந்திய அளவில் 621 இடத்தைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் சென்னை ஷெனாய் நகரில் உள்ள சந்தோஷ் சபரி இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி பெற்ற மாணவி ஆவார். இவருக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மிகுந்த ஊக்கம் அளித்த நிலையில் தேர்வில் வென்றுள்ளார்.
இந்நிலையில், மல்லிகாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வாழ்த்துத் தெரிவித்தார்.
இதுகுறித்து திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கக்குளா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுந்தரம் மற்றும் செவிலியராகப் பணிபுரியும் சித்ராதேவி இணையரின் மகள் மல்லிகா, இந்தியக் குடிமையியல் தேர்வில் (UPSC) இந்திய அளவில் 621-வது இடம் பிடித்துத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவரை, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (08.08.2020) தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, வாழ்த்து மடல் ஒன்றையும் எழுதினார்.
இதையடுத்து, சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவது தனது வெற்றிக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாகவும், அந்த வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய கலைஞருக்கும், தன்னைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச் சொன்ன திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மல்லிகா கூறினார்.
நீலகிரி மாவட்டச் செயலாளர் முபாரக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மல்லிகாவை நேரில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி, திமுக சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்”.
இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.