தமிழகம்

தொடரும் விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள்: கரும்பு விவசாயிகள் சங்க மாநாட்டில் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தற்போதைய அரசிலும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துக்கொண்டே செல்வதாக கரும்பு விவசாயிகள் சங்க மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கரும்பு விவசாயிகள் சங்கத்தின் முதல் அகில இந்திய மாநாடு மதுரையில் நேற்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். வரவேற்பு குழுத் தலைவர் ஆர்.அண்ணாதுரை வரவேற்றார்.

இதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் கே.வரதராஜன் பேசியது: கரும்புக்கான நியாயமான விலையை அரசு நிர்ணயிக்காத காரணத்தால் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த விலைக்கே கரும்புகளை வாங்குகின்றனர். கரும்பு டன்னுக்கு ரூ.3,500 நிர்ணயம் செய்ய வேண்டும் என கரும்பு விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தாலும் சர்க்கரை ஆலைகளோ, அரசோ ரூ.2,200 மட்டுமே விலை நிர்ணயிக்கின்றன.

தாங்கள் அறிவித்த தொகையையும் கரும்பு விவசாயிகளுக்கு முறையாக வழங்கவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை வழங்குவதோடு நிலுவை தொகையையும் உடனே வழங்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் இருந்தாலும், வெளிநாடு சென்றாலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே வேலை செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு இந்திய மக்களை பற்றியோ, விவசாயிகளை பற்றியோ கவலையில்லை என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் பேசியது: இந்தியா முழுவதும் கரும்பு விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மத்திய அரசு நிர்ணயிக்கும் கரும்புக்கான பரிந்துரை விலையைக்கூட தர மறுக்கின்றன. இந்தியா முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையின் அடிப்படையில் உற்பத்திச் செலவுடன் 50% விளைபொருள்களுக்கான செலவையும் சேர்த்து வழங்க வேண்டும் என்றார்.

விவசாயிகள் சங்க துணை செயலர் விஜூ கிருஷ்ணன் பேசியதாவது: நாடு முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.22,000 கோடியை சர்க்கரை ஆலை நிறுவனங்கள் வழங்க வேண்டும். குவிண்டால் கரும்பு உற்பத்தி செய்ய ரூ.280 செலவாகிறது. ஆனால் ரூ.220 மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கரும்புக்கான உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சியில் இருந்ததைப்போல தற்போதைய அரசிலும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கரும்பிலிருந்து சர்க்கரை மட்டுமின்றி உரம், அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன. எனவே கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களின் விலையைக் கொண்டும் கரும்புக்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரம், உத்தரகண்ட், பஞ்சாப், ஒடிசா, தெலங்கானா, ஆந்திரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுமார் 200 பேர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இன்றும் மாநாட்டின் தொடர்ச்சியாக பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT