பந்தலூர் ஓர்கடவு பகுதியில் அபாயகரமான மரத்தை வெட்டும் தீயணைப்பு வீரர். 
தமிழகம்

நீலகிரியில் குறைந்தது மழை; மீட்புப் பணிகள் துரிதம்

ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஐந்து நாட்களில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், இந்தத் தாலுக்காக்கள் வெள்ளக்காடாக மாறின.

சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து மின் விநியோகம் தடைப்பட்டது.

பெரும் மழை, மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த மக்களுக்கு இந்த மழை பேரிடியாக அமைந்துவிட்டது.

இந்நிலையில், தற்போது மழை குறைந்து வருவது மக்களை ஆறுதலடையச் செய்துள்ளது.

8-ம் தேதி (இன்று) அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்த நிலையில், இன்று மழை பெய்யாதது மக்களை நிம்மதியடையச் செய்தது.

மழையால் ஏற்பட்ட சேதம்

மழையால் மூன்று வீடுகள் முழுமையாகவும், 71 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. நான்கு கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

மழையால் பாதிக்கப்பட்ட 312 குடும்பங்களைச் சேர்ந்த 930 பேர் 18 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

கூடலூரில் 9.74 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த 2,300 வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. மாவட்டம் முழுவதும் 224 மரங்கள் விழுந்துள்ளன.

உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் 320 மின் கம்பங்கள், 7 மின் மாற்றிகள், 2 மின் கோபுரங்கள் மற்றும் 40 கி.மீ. அளவுக்கு மின்கம்பிகள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் தண்ணீர் விநியோகம் 10 நாட்களாகத் தடைப்பட்டுள்ளது. மழையும் குறைந்த நிலையில், மக்கள் தண்ணீருக்காகச் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

மீட்புப் பணிகள் துரிதம்

மழை குறைந்துள்ளதால், சீரமைப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

உதகை-கூடலூர் சாலையில் நடுவட்டம் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவை தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் குழந்தைராஜ் தலைமையில் நெடுஞ்சாலைத் துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் சீரமைத்து வருகின்றனர். இப்பகுதியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், மீட்புப் பணிகள் தாமதமாகியுள்ளன. இதனால், இந்தச் சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டது.

உதகை-கூடலூர் சாலையில் நடுவட்டம் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

இதேபோல மாவட்டத்தில் பல பகுதிகளில் விழுந்துள்ள மரங்களைத் தீயணைப்புத் துறையினர் அகற்றி வருகின்றனர்.

பந்தலூர் ஓர்கடவு, வாழவயல், கூடலூர்-மைசூரு சாலையில் மார்தோமா நகர், உதகை அருகே பேலிதளாவில் இருந்து வினோபாஜி நகர் குடியிருப்பு செல்லும் சாலையில் விழுந்த மரங்களைத் தீயணைப்புத் துறையினர் அகற்றி வருகின்றனர்.

பேலிதளா பகுதியில் சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் தீயணைப்புத் துறையினர்.

இந்நிலையில், கூடலூரில் சேதமடைந்த மின் கோபுரத்தைச் சீரமைக்கும் பணியில் கொடைக்கானலில் இருந்து 40 மின் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 341 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.)

உதகை 8, நடுவட்டம் 82, கிளன்மார்கன் 48, குந்தா 5, அவலாஞ்சி 108, எமரால்டு 16, அப்பர் பவானி 65, கூடலூர் 79, ஓவேலி 51, பாடந்தொரை 51, பந்தலூர் 188 மற்றும் சேரங்கோடில் 181 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 48.21 மி.மீ. மழை பதிவானது.

SCROLL FOR NEXT