கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த தூத்துக்குடி- பெங்களூரு விமான சேவை சுமார் 4 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
தூத்துக்குடியில் இருந்து தினமும் சென்னைக்கு 5 விமானங்களும், பெங்களூருவுக்கு ஒரு விமானமும் என 6 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தினமும் சராசரியாக 700 பயணிகள் பயணித்து வந்தனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 25.03.2020 முதல் விமான சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தைத் தொடர்ந்து கடந்த 26.05.2020 முதல் சென்னைக்கு மட்டும் தினமும் 2 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி- பெங்களூரு விமான சேவை நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் தொடங்கியது. முதல் விமானம் 71 பயணிகளுடன் இன்று காலை 7.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து கிளம்பி காலை 8.35 மணிக்கு தூத்துக்குடி வந்து சேர்ந்தது.
விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன், மேலாளர் எஸ்.ஜெயராமன், போக்குவரத்து மேலாளர் ரஞ்சித், தலைமை பாதுகாப்பு அதிகாரி ஷாம்மி, இண்டிகோ நிறுவன மேலாளர் பிரவின் சத்திய சாமூவேல் உள்ளிட்ட அதிகாரிகள் விமானத்துக்கும், அதில் வந்த பயணிகளுக்கும் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து காலை 9 மணிக்கு 68 பயணிகளுடன் விமானம் பெங்களுருவுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று நாட்களும் இயக்கப்படுகின்றன.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தற்போது தினசரி 2 விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் வரும் 13-ம் தேதி முதல் கூடுதலாக ஒரு விமானம் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, பெங்களூருவில் இருந்து வந்த 71 பயணிகளும் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொற்று உறுதியானால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். இல்லையெனில் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார அதாரிகள் தெரிவித்தனர்.