தமிழகம்

மோடி பிரதமராக வர நாங்கள் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தோம்; பாஜகவில் இருக்கும் எஸ்.வி.சேகர் என்ன செய்தார்?- முதல்வர் பழனிசாமி கேள்வி

செய்திப்பிரிவு

எஸ்.வி.சேகர் சொல்வதெற்கெல்லாம் பதில் சொல்ல நாங்கள் தயாராக இல்லை. அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அதிமுக கொடி குறித்து எஸ்.வி.சேகர் விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக எம்எல்ஏவாக இருந்தபோது வாங்கிய சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித் தருவாரா?” எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த எஸ்.வி.சேகர், ''எனக்கு அரசுதான் சம்பளம் கொடுத்தது. அதிமுக அல்ல'' என்று கூறினார்.

“எஸ்வி சேகர் எந்தக் கட்சியில் இருக்கிறார் என்றே தெரியவில்லை? அவர் அதிமுகவில் இருந்தபோதே நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது, ஒரு நாள் கூட எங்களுடன் பிரச்சாரத்திற்கு வந்ததில்லை, ஒரு கருத்தைத் தெரிவித்துவிட்டு அந்தக் கருத்தால் பிரச்சினை ஏற்படும்போது ஓடி ஒளிந்துகொள்ளும் எஸ்.வி.சேகரைக் கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை” என முதல்வர் பழனிசாமி ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வரிடம் எஸ்.வி.சேகரின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது.

அதுகுறித்து முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

“எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார். அதற்கெல்லாம் பதில் அளிக்க முடியாது. ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவராக அவரை எண்ணவில்லை. அவர் பாஜகவில் இருக்கிறார் என்கிறார்கள். நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் எல்லாம் மோடி பிரதமராக வரவேண்டும் எனத் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தோம். ஊர் ஊராகப் போய் எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர் பிரதமராக வரவேண்டும் எனப் பிரச்சாரம் செய்தோம்.

எஸ்.வி.சேகர் என்ன செய்தார். பாஜகவில் இருக்கிறேன் என்கிறார். தனது கட்சித் தலைவர் பிரதமராக வர அவர் பிரச்சாரம் செய்தாரா? அந்தக் கட்சியில் அனைவரும் பிரச்சாரம் செய்தபோது அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?

எஸ்.வி.சேகரை ஒரு கட்சித் தலைவராக நாங்கள் கருதவில்லை. பாஜக தலைவர்கள் யாரும் இதுகுறித்து ஒன்றும் சொல்லவில்லை. இவர் தன்னைப் பற்றி சொல்லிக் கொள்கிறார். ஒவ்வொரு கட்சிப் பொறுப்பாளரும் தங்கள் கட்சித் தலைவர் பொறுப்புக்கு வரப் பாடுபடுவார்கள். அப்படி அவர் எந்தப் பிரச்சாரத்தையும் செய்யவில்லையே. ஆகவே, அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் மதிக்கவில்லை”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.

SCROLL FOR NEXT